மீண்டும் மீண்டும் மாநிலங்கள் பாக்கி வைப்பது ஏன்? - பிரதமர் மோடி கேள்வி
|சாமானிய மக்கள் நேர்மையுடன் மின்கட்டணத்தை செலுத்தும் போது மாநிலங்கள் மட்டும் ஏன் பாக்கி வைக்கின்றன என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
சாமானிய மக்கள் நேர்மையுடன் மின்கட்டணத்தை செலுத்தும் போது மாநிலங்கள் மட்டும் மீண்டும் மீண்டும் ஏன் பாக்கி வைக்கின்றன என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். 'ஒளிமயமான இந்தியா; ஒளிமயமான எதிர்காலம்' என்ற நிகழ்வில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் சீரமைக்கப்பட்ட விநியோகப்பிரிவு திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் தேசிய அனல்மின் கழகத்தின் 5 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். தெலங்கானாவில் 100 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட ராமகுண்டம் மிதவை சூரிய மின்சக்தி திட்டத்தையும் கேரளாவில் 92 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட காயங்குளம் மிதவை சூரிய மின்சக்தி திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே மின்வழித்தடம் திட்டம் என மிகப்பெரும் வலிமையாக திகழ்வதாக குறிப்பிட்டார். அரசியல் என்பது பொதுமக்களுக்கு உண்மையை சொல்வதற்கான துணிச்சல் என தெரிவித்த பிரதமர், பல மாநிலங்கள் அதனை செய்யாமல் தவிர்த்து வருவதை காண்பதாக தெரிவித்தார்.
நமது மின்விநியோக நிறுவனங்களின் இழப்பு இரட்டை இலக்கத்தில் இருப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் மின்விநியோக துறைகளில் இழப்பு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருப்பதாக தெரிவித்தார். சுமார் ரூ. 2.5 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை சிக்கிக்கொண்டிருப்பதாக தெரிவித்த பிரதமர், சாமானிய மக்கள் மின்கட்டணத்தை நேர்மையுடன் திருப்பி செலுத்தும் போது மாநிலங்கள் மட்டும் மீண்டும் மீண்டும் பாக்கி வைப்பது ஏனென்று கேள்வி எழுப்பினார்.
மாநிலங்கள் மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை விரைந்து வழங்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.