வங்காளதேச ஊடுருவல்காரர்களை பற்றி கெஜ்ரிவால் ஏன் பேசவில்லை? அமித்ஷா கேள்வி
|சமணர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிக்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு எதிராக கெஜ்ரிவால் குரலெழுப்புகிறார் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், சி.ஏ.ஏ.வை குறிப்பிட்டு பேசும்போது, நாட்டு விடுதலைக்கு பின்னர் நடந்த புலம்பெயர்தலை விட அதிக அளவில் இனி புலம்பெயர்தல் நடக்கும். சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலையும். இதன் தொடர்ச்சியாக, திருட்டுகள், கொள்ளை சம்பவங்கள் மற்றும் பாலியல் பலாத்காரம் போன்றவை நடக்க வழியேற்படும் என கடுமையாக பேசினார்.
இந்நிலையில், அமித்ஷா இதுபற்றி செய்தியாளர்களிடம் இன்று அளித்த பேட்டியில், ஆம் ஆத்மியின் ஊழல் வெளிப்பட்டதில் டெல்லி முதல்-மந்திரி மனம் தளர்ந்து கோபத்தில் பேசுகிறார்.
இந்த மக்கள் அனைவரும் நம்முடைய நாட்டில் முன்பே அகதிகளாக வந்தவர்கள் என்பது பற்றி தெரியாமல் உள்ளார். அவர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள். 2014-ம் ஆண்டுக்கு முன் நம்முடைய நாட்டுக்கு வந்தவர்கள் குடியுரிமையை பெறுவார்கள் என்று அமித்ஷா பேசியுள்ளார்.
கெஜ்ரிவால் வருத்தப்படுகிறார் என்றால், வங்காளதேச ஊடுருவல்காரர்களை பற்றி அவர் ஏன் பேசவில்லை? ரோகிங்கியாக்களுக்கு எதிராக அவர் ஏன் போராடவில்லை? இவையெல்லாம் வாக்கு வங்கி அரசியலுக்காக அவர்கள் செய்து வருபவை. ரோகிங்கியாக்களும், வங்காளதேச ஊடுருவல்காரர்களும் நம்முடைய வேலைகளை எடுத்து கொள்ளவில்லையா?
சமணர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிக்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு எதிராக கெஜ்ரிவால் குரலெழுப்புகிறார். டெல்லி தேர்தலில் அவர் அதிக சிரமங்களை எதிர்கொள்வார் என்றும் அமித்ஷா கூறினார்.
அவர்கள், லட்சக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை இழந்து விட்டு, அகதிகளாக இந்தியாவுக்கு வந்தவர்கள். நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு இன்றி அவர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஏன் நாம் இரக்கம் காட்ட கூடாது? அவர்களுடைய நாடுகளில் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு நம் நாட்டுக்கு வந்தவர்கள் மீது கெஜ்ரிவால் போன்ற தலைவர்களுக்கு இரக்கமே இல்லை என்றும் கூறினார்.
இதற்கு முன் அமித்ஷா பேசும்போது, குடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெறப்படாது. கொரோனா பாதிப்புகளால் சி.ஏ.ஏ.வை அமல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. சி.ஏ.ஏ.வை அமல்படுத்தமாட்டோம் என்று கூற மாநிலங்களுக்கு உரிமை இல்லை. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஒருபோதும் நாங்கள் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். நாட்டின் குடியுரிமையை உறுதி செய்வது நமது இறையாண்மை உரிமை என்றும் அவர் கூறினார்.
சி.ஏ.ஏ.வை கண்டு சிறுபான்மையினர் அஞ்ச வேண்டாம் என நானே பல முறை கூறியிருக்கிறேன். மோடி அளித்த ஒவ்வொரு வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அமித்ஷா கூறினார்.