சட்டசபை தேர்தலுக்கு 8 மாதங்கள் இருக்கும் நிலையில் சிகாரிப்புரா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிடுவதாக எடியூரப்பா அறிவித்தது ஏன்?
|கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ள நிலையில் சிகாரிப்புரா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிடுவார் என்று எடியூரப்பா அறிவித்தது ஏன்? என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு:
எடியூரப்பா திடீர் அறிவிப்பு
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமாகவும் உள்ள எடியூரப்பா நேற்று முன்தினம் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்றும், தான் இதுவரை போட்டியிட்டு வந்த சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தொகுதியில் தனது மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என்றும் திடீரென்று அறிவித்திருந்தார். தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று எடியூரப்பா அறிவித்திருப்பதன் மூலம் அரசியலில் இருந்து ஓய்வு பெற போவதாக தகவல்கள் பரவியது.
பா.ஜனதாவில் 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்பதாலும், வயது மூப்பு காரணமாகவும் இந்த முடிவை எடியூரப்பா எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. எடியூரப்பாவின் இந்த முடிவு கர்நாடக பா.ஜனதாவிலும் பல்வறேு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
விஜயேந்திராவின் அரசியல் எதிர்காலம்
ஆனால் இந்த விவகாரத்தில் எடியூரப்பா தனது மகனின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், பா.ஜனதா மேலிடத்திற்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகவும் தான் தன்னுடைய மகன் சிகாரிப்புராவில் போட்டியிடுவார் என்று அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கூட்டணி ஆட்சி கவிழ்ந்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்ததும், 2 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்தார். அதன்பிறகு, தனது முதல்-மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார்.
முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த பின்பு தனது மகன் விஜயேந்திராவுக்கு மந்திரி பதவி அல்லது கட்சியில் உயர் பதவி கிடைக்கும் என்று எடியூரப்பா எதிர்பார்த்தார். ஆனால் விஜயேந்திராவுக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை. குறிப்பாக சமீபத்தில் நடந்த மேல்-சபை தேர்தலில் விஜயேந்திரா போட்டியிட வாய்ப்பு கிடைக்கும், அவர் எம்.எல்.சி.யாக தேர்வு செய்யப்பட்டு மந்திரியாக பதவி ஏற்கலாம் என்ற தகவலும் வெளியானது.
வாய்ப்பு கிடைக்கவில்லை
ஆனால் மேல்-சபை தேர்தலில் போட்டியிட விஜயேந்திராவுக்கு பா.ஜனதா மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியானது. கடைசி நேரத்தில் பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்காததால் சட்டசபை தேர்தலில் விஜயேந்திராவால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக கர்நாடக மேல்-சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் விஜயேந்திரா பெயரும் சிபாரிசு செய்யப்பட்டு கட்சி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் விஜயேந்திராவுக்கு வாய்ப்பு கிடைக்காததால் எடியூரப்பாவும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜனதா மேலிடம் கண்டிப்பாக விஜயேந்திராவுக்கு வாய்ப்பளிக்கும் என்று எடியூரப்பா தொடர்ந்து கூறி வந்தார். இந்த நிலையில், தான் யாரும் எதிர்பார்க்க வகையில் நேற்று முன்தினம் சிகாரிப்புரா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிடுவதாக எடியூரப்பா அறிவித்திருந்தார்.
இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு...
எடியூரப்பாவின் இந்த அறிவிப்பு மூலமாக பா.ஜனதா மேலிடமும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் சட்டசபை தேர்தலில் எடியூரப்பா அல்லது விஜயேந்திராவை புறக்கணித்தால், லிங்காயத் சமுதாயத்தின் எதிர்ப்பை பா.ஜனதா சந்திக்க நேரிடும். ஏனெனில் பா.ஜனதாவில் எடியூரப்பா தவிர்க்க முடியாத தலைவர் ஆவார். இது சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. தற்போது பா.ஜனதாவில் வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
ஆனாலும் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிகாரிப்புராவில் விஜயேந்திரா போட்டியிடுவார் என்று எடியூரப்பா அறிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டு அடுத்த சட்டசபை தேர்தலில் சிகாரிப்புரா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிட பா.ஜனதா மேலிடம் அனுமதி அளிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.