பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு கெம்பேகவுடா பெயரை சூட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தயங்கியது ஏன்?; பசவராஜ் பொம்மை கேள்வி
|பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு கெம்பேகவுடா பெயரை சூட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தயங்கியது ஏன்? என்று பசவராஜ் பொம்மை கேள்வி எழுப்பி உள்ளார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பிறந்த குழந்தைகளுக்கு எல்லாம் பெயர் வைத்தது நானே என்று சித்தராமையா சொல்கிறார். பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு கெம்பேகவுடா பெயர் சூட்ட முந்தைய பா.ஜனதா அரசில் முடிவு செய்யப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி அன்றைய பா.ஜனதா அரசின் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா பெயர் சூட்டினார். அப்போது இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கெம்பேகவுடா பெயரை சூட்ட 4 ஆண்டுகள் எடுத்து கொண்டது. மந்திரிசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதும் மத்திய அரசு மவுனமாக இருந்தது. அதன் பிறகு 2012-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை மற்றும் மேல்-சபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு தான் அந்த மத்திய அரசு கெம்பேகவுடா பெயரை சூட்டுவதாக அறிவித்தது. சர்வதேச விமான நிலையத்திற்கு கெம்பேகவுடா பெயரை சூட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தயங்கியது ஏன்?.
இவ்வாறு பசவராஜ் பொம்மை குறிப்பிட்டுள்ளார்.