40 சதவீத கமிஷன் புகார் குறித்து பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்?; குமாரசாமி கேள்வி
|40 சதவீத கமிஷன் புகார் குறித்து பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சி.பி.ஐ. விசாரணை
கர்நாடகத்தில் நடைபெறுவது 40 சதவீத கமிஷன் அரசு என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு, கல்லூரி ஆசிரியர் தேர்வு முறைகேடு உள்பட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவரே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி 40 சதவீத கமிஷன் வழங்க வேண்டும் என்று வற்புறுத்துவதாக புகார் கூறினார். அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?.
டெல்லியில் மதுபான கொள்கை குறித்த முறைகேடு புகாரில் அங்குள்ள துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்துகிறது. ஆனால் கர்நாடகத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்தாலும் அதை எந்த விசாரணை அமைப்பும் கண்டு கொள்ளவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மங்களூரு முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் அங்கு வளர்ச்சிக்கு எதிரான சூழலை பா.ஜனதாவினர் செய்து வருகிறார்கள்.
பிரதமர் மோடி
இந்த நிலையில் பிரதமர் மோடி மங்களூரு வருகிறார். இந்த செய்தியை மக்களுக்கு சொல்ல அவர் மங்களூரு வருகிறாரா? என்று தெரியவில்லை. கர்நாடகத்திற்கு வெளிமாநிலங்களில் நற்பெயர் உள்ளது. ஆனால் முதலீட்டாளர்கள் இங்கு நீடிப்பது குறித்து ஆலோசிக்க தொடங்கியுள்ளனர். அசைவம், வீரசாவர்க்கர் போன்ற விஷயங்களில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியினர் நேரத்தை வீணடிக்கிறார்கள்.
பா.ஜனதாவினர் வீரசாவர்க்கர் ரத யாத்திரை நடத்துகிறார்கள். இதனால் என்ன பயன்?. ஏழை மக்களின் வயிற்றை நிரப்ப ஏதாவது திட்டத்தை அமல்படுத்தினால் அது வீரசாவர்க்கருக்கு மரியாதை அளித்தது போல் ஆகும். ஊழலை ஒழிக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.