'இந்தியா' கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் ? - உத்தவ் தாக்கரே விளக்கம்
|இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது.
புதுடெல்லி,
2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் 'இந்தியா' கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 19-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது.
இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் உள்பட 14 கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். எனினும், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை
இந்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் ? என்று உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது ,
"இது சம்பந்தமாக எந்த தவறான புரிதலும் இருக்கக்கூடாது. நான் ஒரு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை இது போன்ற ஒரு சூழ்நிலையில், கூட்டத்தில் கலந்துகொள்வது கடினமாக இருக்கும். கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்பது குறித்து ஏற்கனவே தெரிவித்து விட்டேன். என கூறினார்.