< Back
தேசிய செய்திகள்
சந்திரயான்-3 தரையிறங்கியபோது வைரலான 45 டிரில்லியன் ஹேஷ்டேக்..! காரணம் இதுதான்..!
தேசிய செய்திகள்

சந்திரயான்-3 தரையிறங்கியபோது வைரலான '45 டிரில்லியன்' ஹேஷ்டேக்..! காரணம் இதுதான்..!

தினத்தந்தி
|
24 Aug 2023 8:26 AM GMT

இந்தியா மேம்பட்ட விண்வெளி திட்டத்தைக் கொண்டிருப்பதால் இந்தியாவுக்கு இங்கிலாந்து உதவிகளை அனுப்பக்கூடாது என பத்திரிகையாளர் பதிவிட்டிருந்தார்.

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த சாதனைக்கு பங்காற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

ஆனால், விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியபின்னர் பத்திரிகையாளர் சோஃபி கோர்கோரன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்து பெரும் விவாதப்பொருளானது. இங்கிலாந்து இந்தியாவுக்கு அனுப்பும் உதவி பற்றிய அந்த விவாதம் தொடங்கியபின்னர், 45 டிரில்லியன் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது.

"இந்தியா மேம்பட்ட விண்வெளித் திட்டத்தைக் கொண்டிருப்பதால் இந்தியாவுக்கு இங்கிலாந்து உதவிகளை அனுப்பக்கூடாது. எங்கள் பணத்தை நாங்கள் திரும்பப் பெறவேண்டிய நேரம் இது" என்று அந்த பத்திரிகையாளர் எக்ஸ் தளத்தில் (முன்பு டுவிட்டர்) பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு வைரலாக பரவத் தொடங்கிய நிலையில், இந்தியாவில் உள்ள பயனர்கள் பதிலடி கொடுக்கத் தொடங்கினர். இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை இங்கிலாந்தும் திருப்பித் தர வேண்டும் என்றும், அந்த தொகை 45 டிரில்லியன் டாலர் என்றும் கூறினர்.

1765-1938 காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்து மொத்தம் 45 டிரில்லியன் டாலர்களை வெளியேற்றியதாக பொருளாதார நிபுணர் உத்சா பட்நாயக் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இந்த ஆய்வு கட்டுரையை கொலம்பியா யுனிவர்சிட்டி பிரஸ் வெளியிட்டபிறகு இந்த தொகை குறித்த தகவல் முதலில் வெளிச்சத்திற்கு வந்தது.

இப்போது பத்திரிகையாளரின் பதிவால் கொதித்தெழுந்த இந்தியர்கள் 45 டிரில்லியன் டாலர் என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கினர். நீங்கள் இந்தியாவிடம் கேட்டது 2.5 பில்லியன் டாலர், அதைக் கழித்துவிட்டு மீதமுள்ள 44.997 டிரில்லியன் டாலரை இந்தியாவுக்குத் திருப்பி கொடுங்கள் என ஒரு பயனர் கணக்கு போட்டு கதறவிட்டார். எங்கள் கோகினூர் வைரத்தையும் திருப்பிக் கொடுங்கள், என ஒரு பயனர் பதிவிட்டார்.

இந்திய பயனர்கள் குறிப்பிட்ட 45 டிரில்லியன் டாலர் என்ற தொகையானது, இப்போது இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 15 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்