< Back
தேசிய செய்திகள்
தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் யார் பக்கம் நிற்கின்றனர்? - மல்லிகார்ஜுன கார்கே கேள்வி
தேசிய செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் யார் பக்கம் நிற்கின்றனர்? - மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

தினத்தந்தி
|
11 May 2024 10:49 AM GMT

காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தின் பக்கம் நிற்பதாக தனது கடிதத்தில் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், வாக்குப்பதிவு புள்ளி விபரங்கள் அளிப்பதில் காலதாமதம் மற்றும் முரண்பாடுகள் ஏற்படுவதால், தேர்தல்களின் சுதந்திரமான மற்றும் நியாயமான தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகின்றன என தேர்தல் ஆணையத்தை கடிதம் மூலமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில், வாக்குப்பதிவு, தரவுகள் குறித்து விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்தது. வாக்குப்பதிவு சதவீதத்தில் முரண்பாடுகள் இருப்பதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தனது கருத்துக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்த நிலையில், மீண்டும் மல்லிகார்ஜுன கார்கே இந்த விவகாரம் தொடர்பாக பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;

நான் கடந்த வாரம் எழுதிய கடிதம் தேர்தல் ஆணையத்திற்கு எழுதவில்லை. எங்களின் கூட்டணி கட்சிகளுக்கு எழுதியது. நேரடியாக அளிக்கும் புகார்களையே கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம், தனது கூட்டணி கட்சிகளுக்கு தான் எழுதிய கடிதத்துக்கு பதிலளித்து இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஒருபக்கம் குடிமக்களின் கேள்வி உரிமையை மதிப்பதாக கூறும் தேர்தல் ஆணையம், மற்றொரு பக்கம் அறிவுரை என்ற பெயரில் மிரட்டுகிறது.

காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தின் பக்கம் நிற்கிறது. தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் வலிமைக்காக காங்கிரஸ் குரல் கொடுக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் யார் பக்கம் நிற்கின்றனர் என்பதை அவர்களே முடிவுசெய்யட்டும்."

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்