நாற்காலியில் யார் அமர்வது? டெல்லி ஐகோர்ட்டு கேன்டீனில் பெண் வழக்கறிஞர்கள் இடையே அடிதடி, தகராறு
|அவரை அமைதிப்படுத்த முயன்ற ஒரு மூத்த பெண் வழக்கறிஞரை இந்த பெண் வழக்கறிஞர் கன்னத்தில் அறைந்து விட்டார்.
புதுடெல்லி,
டெல்லி ஐகோர்ட்டு கேன்டீனில் பெண் வழக்கறிஞர்கள் இடையே, நாற்காலியில் யார் அமர்வது? என்பதில் தகராறு ஏற்பட்டது. இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
இதுபற்றிய வீடியோ ஒன்று வெளிவந்து வைரலானது. இதன்படி, ஒரு பெண் வழக்கறிஞர் மற்றொரு மூத்த பெண் வழக்கறிஞரின் கன்னத்தில் அறைந்திருக்கிறார். மேஜையின் மீது உணவு பொருட்கள் சிதறி கிடக்கின்றன. சில வழக்கறிஞர்களின் ஆடைகளின் மீதும் உணவுகள் காணப்பட்டன.
இதுபற்றி சம்பவத்தின்போது அதனை பார்த்த நபர் ஒருவர் கூறும்போது, கேன்டீனில் வழக்கறிஞர்கள் சிலர் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போது, கேன்டீனுக்கு வந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் அவர்களிடம் அமளியில் ஈடுபட்டார். சில மூத்த வழக்கறிஞர்களும் கேன்டீனில் அமர்ந்திருந்தனர்.
அவர்கள், அந்த பெண்ணை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், அதனை அவர் கவனத்தில் கொள்ளவில்லை. உணவை எடுத்து சுற்றிலும் வீச தொடங்கினார். இதனை பார்த்த ஒரு மூத்த பெண் வழக்கறிஞர் வந்து, அவரை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால், அவரை இந்த வழக்கறிஞர் கன்னத்தில் அறைந்து விட்டார் என கூறியுள்ளார்.
எனினும், இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க அழுத்தம் கொடுக்க போவதில்லை என்று மூத்த பெண் வழக்கறிஞர் கூறியுள்ளார்.