< Back
தேசிய செய்திகள்
5ம் வகுப்பு மட்டுமே படிப்பு டாக்டர் என 12 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன்
தேசிய செய்திகள்

"5ம் வகுப்பு மட்டுமே படிப்பு" டாக்டர் என 12 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன்

தினத்தந்தி
|
13 July 2023 4:25 PM IST

கல்யாண மன்னன் 12 பெண்களை இவர் ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மைசூரு

ஆன்லைனில் விதவைகள் மற்றும் திருமணமாகாத பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம், நகைகளை கொள்ளையடித்து வந்த கல்யாண மன்னன் ஒருவரை மைசூர் போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு பன்னஷங்கரி என்ற இடத்தில் வசிக்கக்கூடிய மகேஷ் கேபி. நாயக் என்ற 34 வயது நபர் 2014ம் ஆண்டில் துவங்கி இன்று வரை 12க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதில் அவர்களுக்கு 4 குழந்தைகளும் கூட உள்ளதாம்.

5ம் வகுப்பு வரையே படித்துள்ள மகேஷ் தன்னை ஒரு இன்ஜினீயர் என்றும் டாக்டர் என்றும் ஆன்லைன் திருமண இணையதளங்களில் ஐடியை உருவாக்கி வைத்து கொண்டு 12க்கும் மேற்பட்ட பெண்களை அந்த இணையதளம் வாயிலாகவே சந்தித்து திருமணம் செய்துள்ளார். தும்கூர் பகுதியில் போலி கிளினிக் ஒன்றையும் கூட நடத்தி வந்துள்ளார்.

திருமணம் செய்யும் பெண்கள் அனைவரையும் பொருளாதார ரீதியாக வளமாக உள்ளவர்களாக பார்த்து தேர்வு செய்யும் மகேஷ், அவர்களை ஏமாற்றி பல லட்சக்கணக்கான பணத்தையும் வாங்கியுள்ளார். ஒருவரிடம் தன்னுடைய தேவைகள் முடிந்தவுடன் வேறு ஒரு நகரில் புதிய பெண்ணை பார்த்து ஏமாற்றி திருமணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அப்படி இதுவரை 12 பெண்களை இவர் ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெண்கள் புகார் கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர். இறுதியாக மைசூரை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து மகேஷ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மகேஷிடம் இருந்து 2 லட்சம் ரொக்கம், 2 கார்கள், 1 வளையல், 1 மோதிரம், 2 தங்க வளையல்கள், 1 நெக்லஸ், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளன.

அவர் 12 முறை திருமணம் செய்து கொண்டு உள்ளார். இவர்களில் 6 பெண்களுக்கு குழந்தைகள் உள்ளனர். எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என்பதால் திருமணத்தைத் தேர்ந்தெடுத்தார். அவனது இலக்கு பணக்காரப் பெண்கள். ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம். சொத்து எதுவும் வாங்கவில்லை. ஏமாற்றிய பணத்தையெல்லாம் சுகபோகமாக செலவழித்து இப்போது சிறையில் இருக்கிறார்.

மேலும் செய்திகள்