< Back
தேசிய செய்திகள்
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் யார்?
தேசிய செய்திகள்

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் யார்?

தினத்தந்தி
|
2 July 2023 3:26 AM IST

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

பெங்களூரு:-

சட்டசபை தேர்தலில் தோல்வி

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி அடைந்தது. வெறும் 66 தொகுதிகளில் மட்டுமே பா.ஜனதாவால் வெற்றி பெற முடிந்தது. சட்டசபை தேர்தலில் தோல்விக்கு பின்பு பா.ஜனதாவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு கூறி வருவதுடன், முக்கிய தலைவர்கள் சமரச அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதாப் சிம்ஹா எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

சட்டசபை தேர்தல் முடிந்து 2 மாதம் ஆக உள்ள நிலையில் இன்னும் எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதை பா.ஜனதா மேலிடம் அறிவிக்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி நடைபெற உள்ளது. இதனால் எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதை அறிவித்தே தீர வேண்டிய நிலை பா.ஜனதாவுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

இன்று அறிவிப்பு வெளியாகிறது

இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாளை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால், எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. மேலும் பெங்களூருவில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறலாம் என்றும், அந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

என்றாலும், இந்த விவகாரத்தில் பா.ஜனதா தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் துணை முதல்-மந்திரி அசோக், எம்.எல்.ஏ.க்களான யத்னால், அரவிந்த் பெல்லத் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பசவராஜ் பொம்மைக்கு வாய்ப்பு

சட்டசபையில் அரசுக்கு எதிராக பேசுவதற்கும், நிதித்துறை பற்றிய நன்கு தெரிந்தவருமான பசவராஜ் பொம்மைக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 5 முதல்-மந்திரியுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது. ஆளும் கட்சியினருக்கு தக்க பதிலடி கொடுத்து பேசும் திறமையும் பசவராஜ் பொம்மைக்கு உள்ளது. ஆனால் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுடன் அவர் நெருக்கம் காட்டி வருவதால், எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் யத்னால் எம்.எல்.ஏ. இந்துத்வா கொள்கைகள் பற்றி நிரந்தரமாக பேசி வருவதாலும், மாநிலத்தில் காங்கிரஸ் அரசு அமைந்ததில் இருந்து தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருவதாலும், அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுபோல், அசோக், அரவிந்த் பெல்லத்தும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வருகிறார்கள். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பது இன்று தெரிந்துவிடும்.

மேலும் செய்திகள்