ஒயிட்பீல்டு-சல்லகட்டா இடையே இன்று முதல் மெட்ரோ சேவை தொடக்கம்
|பெங்களூருவில் ஒயிட்பீல்டு-சல்லகட்டா இடையே இன்று (திங்கட்கிழமை) முதல் மெட்ரோ சேவை தொடங்குகிறது. இதனால் ஐ.டி. ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் சாலை போக்குவரத்தை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பையப்பனஹள்ளி-கெங்கேரி உள்ளிட்ட சில வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் கே.ஆர்.புரம்-பையப்பனஹள்ளி இடையேவும், கெங்கேரி-சல்லகட்டா இடையேவும் மெட்ரோ பாதை அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுக்கு முன் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த மாதம் பணிகள் முடிந்தன.
இதையடுத்து மெட்ரோ நிர்வாகம் சார்பில் எடை சோதனை உள்ளிட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் இறுதியாக ரெயில் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்தார். 2 வழித்தடங்களிலும் தனித்தனியே ஆய்வு நடைபெற்றது. இதையடுத்து மெட்ரோ ரெயில்களை இயக்க பாதுகாப்பு கமிஷனர் அனுமதி வழங்கினார்.
இந்த நிலையில் கே.ஆர்.புரம்-பையப்பனஹள்ளி மற்றும் கெங்கேரி-சல்லக்கட்டா இடையே இன்று (திங்கட்கிழமை) முதல் மெட்ரோ சேவை தொடங்குகிறது. இன்று (திங்கட்கிழமை) முதல் ஒயிட்பீல்டு-சல்லகட்டா இடையே முழுைமயாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. ஊதா நிற பாதையில் மொத்தம் 42.85 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பெங்களூருவில் சல்லகட்டா முதல் ஒயிட்பீல்டு வரை 3 பகுதிகளாக மெட்ரோ பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தன. தற்போது கே.ஆர்.புரம்-பையப்பனஹள்ளி மற்றும் கெங்கேரி-சல்லகட்டா இடையே பணிகள் முடிவடைந்து நாளை (இன்று) முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குகிறது.
இதனால் பையப்பனஹள்ளியில் இருந்து ஒயிட்பீல்டு செல்பவர்கள் கே.ஆர்.புரம் வரை பஸ்களை பயன்படுத்தி சென்று அதன் பிறகு மெட்ரோ ரெயில்களில் பயணிக்க வேண்டி இருந்தது. இனிமேல் ஒயிட்பீல்டு முதல் சல்லகட்டா வரை மெட்ரோ ரெயிலில் பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
கே.ஆர்.புரம்-பையப்பனஹள்ளி இடையே மெட்ரோ ரெயில் சேைவ தொடங்கி உள்ளதால் ஐ.டி. ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் ஊதா நிற பாதையில் ஒயிட்பீல்டு-சல்லகட்டா இடையே முழுமையாக மெட்ரோ ரெயில் சேவை தொடங்க உள்ளதால் பா.ஜனதா எம்.பி.க்கள் பி.சி.மோகன், தேஜஸ்வி சூர்யா, சதானந்த கவுடா ஆகியோர் பிரதமர் மோடிக்கு பெங்களூரு வாசிகள் சார்பாக நன்றி தெரிவித்துள்ளனர்.