< Back
தேசிய செய்திகள்
சோமாலிய கடலில் கொள்ளையர்களிடம் இருந்து கப்பல் மீட்கப்பட்டது எப்படி? இந்திய கடற்படை விளக்கம்

Image Courtesy : @indiannavy

தேசிய செய்திகள்

சோமாலிய கடலில் கொள்ளையர்களிடம் இருந்து கப்பல் மீட்கப்பட்டது எப்படி? இந்திய கடற்படை விளக்கம்

தினத்தந்தி
|
6 Jan 2024 2:54 PM IST

இந்திய மாலுமிகளுடன் கடத்தப்பட்ட கப்பலை இந்திய கடற்படை கமாண்டோக்கள் அதிரடியாக மீட்டனர்.

புதுடெல்லி,

அரபிக்கடலில் சோமாலியா கடற்பகுதியில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு கப்பல், கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. அந்த கப்பல், லைபீரியா நாட்டு கொடி கட்டப்பட்ட 'எம்.வி. லிலா நார்போல்க்' என்ற பெயர் கொண்டது.

அக்கப்பலில் 15 இந்திய மாலுமிகள் உள்பட 21 ஊழியர்களும் இருப்பதாக தெரிய வந்தது. உடனே, கடத்தப்பட்ட கப்பலை மீட்கும் பணிக்காக இந்திய கடற்படை ரோந்து பணியை தொடங்கியது. கடல்சார் பாதுகாப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் 'ஐ.என்.எஸ். சென்னை' போர்க்கப்பலை, கடத்தப்பட்ட கப்பலை மீட்கும் பணிக்கு திருப்பி விட்டது.

அத்துடன் கடற்படை ரோந்து விமானம், ஹெலிகாப்டர்கள், நீண்டதூர விமானம் மற்றும் டிரோன்கள் என பெரும் படையே அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கடற்படை கமாண்டோக்களும் இந்த மீட்பு நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விரைவாக சென்ற ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பல், நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் கடத்தப்பட்ட கப்பலை நெருங்கியது. பின்னர் அதிரடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கிய கடற்படை கமாண்டோ வீரர்கள், கப்பலில் இறங்கி 21 ஊழியர்களையும் முதலில் பத்திரமாக மீட்டனர்.

அதைத்தொடர்ந்து கப்பல் முழுவதையும் அவர்கள் சோதனையிட்டனர். அப்போது கப்பலில் கடற்கொள்ளையர்கள் யாரும் இல்லை என்பது தெரியவந்தது. இந்திய கடற்படையின் எச்சரிக்கையை தொடர்ந்து, கடத்தல்காரர்கள் கடத்தல் முயற்சியை கைவிட்டு தப்பியோடியதாக தெரிகிறது.

கடத்தப்பட்ட கப்பலில் மின் உற்பத்தி மற்றும் இயக்க நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும், அடுத்த துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்கவும் ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பல் உதவி வருவதாக இந்திய கடற்படை செய்தித்தொடர்பாளர் விவேக் மத்வால் தெரிவித்தார்.

இந்த நிலையில் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட கடற்கொள்ளையர்களை தற்போது இந்திய கடற்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வடக்கு அரபிக் கடலில் சந்தேகத்திற்குரிய வகையில் செல்லும் கப்பல்களை இந்திய கடற்படையினர் சோதனையிட்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"ஐ.என்.எஸ். சென்னை வழிகாட்டும் ஏவுகணை அழிப்புக் கப்பல் 3.15 மணிக்கு கடத்தப்பட்ட 'எம்.வி. லிலா நார்போல்க்' கப்பலை நெருங்கியது. தொடர்ந்து கடற்படை ரோந்து விமானம் மற்றும் டிரோன் மூலம் கப்பல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்திய கடற்படை கமாண்டோக்கள் அந்த கப்பலில் ஏறி, மேல் தளங்கள், இயந்திரப் பெட்டிகள் மற்றும் மாலுமிகள் தங்கும் இடங்களை முழுவதுமாக சோதனையிட்டனர்.

கப்பலில் கடற்கொள்ளையர் எவரையும் குழு கண்டுபிடிக்கவில்லை. இந்திய கடற்படையின் பலத்த எச்சரிக்கைகள் மற்றும் இந்திய கடற்படை போர்க்கப்பலின் இடைமறிப்பு ஆகியவற்றின் காரணமாக கடற்கொள்ளையர்களை இரவு நேரத்தில் தப்பித்து சென்றிருக்கலாம்.

கடத்தப்பட்ட 'எம்.வி. லிலா நார்போல்க்' கப்பலில் இருந்த 21 பணியாளர்களும் மீட்கப்பட்டு தற்போது பாதுகாப்பாக உள்ளனர். இந்திய கடற்படையினர் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான கப்பல்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

இவ்வாறு இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்