மத்திய அரசின் ஊழல்கள் குறித்து எப்போது விசாரணை நடத்தப்படும்?; முதல்-மந்திரி சித்தராமையா கேள்வி
|மத்திய அரசின் ஊழல்கள் குறித்து எப்போது விசாரணை நடத்தப்படும்? என்று முதல்-மந்திரி சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் 40 சதவீத கமிஷன் புகார் எழுந்தது. இதுகுறித்து நாங்கள் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் நீதி விசாரணை குழுவை அமைத்துள்ளோம். இதன்மூலம் நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். மத்திய அரசு துவாரகா விரைவுச்சாலை, ஆயுஸ்மான் பாரத் திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக கணக்கு தணிக்கை நிறுவனம் அறிக்கை வழங்கியுள்ளது.
பாரத்மாலா திட்டத்தில் தவறுகள் நடந்துள்ளன. அந்த திட்டத்தின் டெண்டர் பணியிலேயே முறைகேடு நடந்துள்ளது. இந்த திட்டத்தில் ரூ.3,500 கோடி மாற்றப்பட்டுள்ளது. இதை கணக்கு தணிக்கை குழு கூறியுள்ளது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்?. இதில் பிரதமர் மோடிக்கும் பங்கு உள்ளதாக எடுத்துக் கொள்ளலாமா?. இதுகுறித்து மத்திய அரசு எப்போது விசாரணை நடத்த போகிறது?.
இந்தியா கூட்டணியை ஊழல் கூட்டணி என்று மோடி சொல்கிறார். ஆனால் மத்திய அரசில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது குறித்து அமைதியாக இருப்பது சரியா?. அயோத்தி ராமர்கோவில் கட்டுமான பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக சொல்கிறார்கள்.
இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.