மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடைபெறும்? - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி
|மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடைபெறும் என்று ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் அவை கூடியதும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சட்டத்துறை மந்திரி அர்ஜுன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார்.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் அலுவலாக தாக்கல் செய்யப்பட்டது. மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் மசோதா மீது நாளை விவாதம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பையே இன்னும் மத்திய அரசு நடத்தவில்லை, இதனிடையே மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே மசோதா அமலாகும் என மத்திய அரசு கூறுவது துரோகம். ஜி20 கூட்டமைப்பு நாடுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளத் தவறிய நாடு இந்தியா மட்டுமே.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுமா? மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் அமலாக்கத் தேதி குறித்த தெளிவற்ற வாக்குறுதியுடன், மசோதா இன்று தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.