< Back
தேசிய செய்திகள்
சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்தால் சமையல் கியாசை மிகவும் மலிவான விலைக்கு விற்க முடியும் -  பெட்ரோலியத்துறை மந்திரி
தேசிய செய்திகள்

சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்தால் சமையல் கியாசை மிகவும் மலிவான விலைக்கு விற்க முடியும் - பெட்ரோலியத்துறை மந்திரி

தினத்தந்தி
|
10 Feb 2023 2:45 AM IST

சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்தால், சமையல் கியாசை மிகவும் மலிவான விலைக்கு விற்க முடியும் என்று நாடாளுமன்றத்தில் பெட்ரோலிய மந்திரி கூறினார்.

சமையல் கியாஸ்

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, சமையல் கியாஸ் விலை ஏன் குறைக்கப்படவில்லை? என்று உறுப்பினர்கள் கேட்டனர். அதற்கு பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி கூறியதாவது:-

நுகர்வோரின் தேவைகளை மத்திய அரசு உணர்ந்துள்ளது. சவுதி ஒப்பந்த விலை 330 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், உள்நாட்டில் மிகச்சிறிய அளவுக்குத்தான் விலையை உயர்த்தினோம்.சவுதி ஒப்பந்தப்படி, சர்வதேச கச்சா எண்ணெய் விலை, தற்போது டன்னுக்கு 750 டாலராக உள்ளது. அதன் விலை குறைந்தால், உள்நாட்டில் சமையல் கியாசை இன்னும் மலிவான விலைக்கு விற்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்மார்ட் சிட்டி

மக்களவை கேள்வி நேரத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் ஒவ்வொரு நகரத்துக்கும் இடையே மாறுபாடு காணப்படுவது ஏன்? என்று காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர் கேட்டார்.

அதற்கு மத்திய மந்திரி ஹர்தீப்சிங் பூரி கூறியதாவது:-

ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்ட 100 நகரங்களும் நன்றாக முன்னேறி வருகின்றன. சில நகரங்களில் கொரோனா காரணமாகவோ அல்லது உள்ளூர் நிலவரம் காரணமாகவோ பணிகளில் மந்தநிலை காணப்படலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிலுவை வழக்குகள்

மாநிலங்களவை கேள்வி நேரத்தில், மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கூறியதாவது:-

கடந்த 1-ந்தேதி நிலவரப்படி, சுப்ரீம் கோர்ட்டில் 69 ஆயிரத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஐகோர்ட்டுகளில் 59 லட்சத்து 87 ஆயிரத்து 477 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில், அலகாபாத் ஐகோர்ட்டில் மட்டும் 10 லட்சத்து 30 ஆயிரம் வழக்குகள் இருக்கின்றன. குறைந்த அளவாக, சிக்கிம் ஐகோர்ட்டில் 171 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகளை விரைந்து தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்