< Back
தேசிய செய்திகள்
கோகினூர் வைரம் இந்தியாவுக்கு எப்போது திருப்பி கொண்டு வரப்படும்? மத்திய அரசு பதில்
தேசிய செய்திகள்

கோகினூர் வைரம் இந்தியாவுக்கு எப்போது திருப்பி கொண்டு வரப்படும்? மத்திய அரசு பதில்

தினத்தந்தி
|
15 Oct 2022 4:26 PM IST

இங்கிலாந்தில் இருந்து கோகினூர் வைரம் இந்தியாவுக்கு எப்போது திருப்பி கொண்டு வரப்படும் என்ற கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்து உள்ளது.



புதுடெல்லி,


ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இங்கிலாந்து அரசியாக இருந்த ராணி விக்டோரியாவுக்கு, 1849-ம் ஆண்டு துலீப் சிங் என்ற இந்திய மகாராஜா 108 காரட் கொண்ட கோகினூர் வைரம் ஒன்றை வழங்கினார்.

இந்தியாவின் கோகினூரில் எடுக்கப்பட்ட இந்த வைரம் பின்னர் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் கிரீடத்தில் சேர்க்கப்பட்டு அலங்கரித்து வருகிறது. அந்த கிரீடம், விலைமதிப்பற்ற 2 ஆயிரத்து 800 வைர கற்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

கிரீடத்தின் மையத்தில், 21 கிராம் எடை கொண்ட 108 காரட் கோகினூர் வைரம் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரம் பதித்த கிரீடம் அணிந்து, அரசின் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இங்கிலாந்து ராணிகளின் வழக்கம்.

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் சமீபத்திய மறைவுக்கு பின்னர், ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட விலைமதிப்பில்லா பொருட்களை திரும்ப ஒப்படைக்கும்படி டுவிட்டரில் கோரி வருகிறது.

இந்திய தரப்பிலும், கோகினூர் வைரம் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதுபற்றிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி, இந்த விவகாரத்தில் திருப்தியான தீர்வு ஏற்படுவதற்கான வழிகளை மத்திய அரசு தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது என கூறியுள்ளார்.

இந்த கேள்விக்கு, நாடாளுமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசு அளித்த பதிலையும் அவர் சுட்டி காட்டினார். இந்த விவகாரம் பற்றி இங்கிலாந்து அரசாங்கத்திடம் அவ்வப்போது எடுத்து கூறி வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்