< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற தேர்தல் எப்போது? மத்திய உள்துறை செயலாளருடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று சந்திப்பு
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் எப்போது? மத்திய உள்துறை செயலாளருடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று சந்திப்பு

தினத்தந்தி
|
8 March 2024 1:50 PM IST

நாடாளுமன்ற தேர்தலுக்காக 3.40 லட்சம் மத்திய ஆயுதப்படை போலீசாரை தேர்தல் ஆணையம் மத்திய அரசிடம் கேட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதற்கான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்னும் சில நாட்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தேர்தலுக்கான பாதுகாப்பு தயார்நிலையை மறுபரிசீலனை செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் சக தேர்தல் ஆணையர் அருண் கோயல் ஆகியோரை மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா இன்று அழைத்துள்ளார். இந்த ஆலோசனையில் மாநிலங்களில் மத்திய படைகளை நிலைநிறுத்துவது குறித்து விவாதிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆயத்த பணிகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஜம்மு மற்றும் காஷ்மீர் பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தலுக்காக 3.40 லட்சம் மத்திய ஆயுதப்படை போலீசாரை தேர்தல் ஆணையம் மத்திய அரசிடம் கேட்டுள்ளது. கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்களைக் கொண்ட தேர்தல் ஆணையம் இந்தியா முழுவதும் சுமார் 12.5 லட்சம் வாக்குச்சாவடிகளை அமைக்க உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தேர்தல் தலைமை ஆணையர் ரெயில்வே உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளனர். பல்வேறு கட்டங்களில் மத்திய ஆயுதப்படைகளை அனுப்புவதில் ரெயில்வே துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் செய்திகள்