வாட்ஸ்அப், ஜூம், கூகுள் டியோவுக்கு உரிமம் பெறுவது கட்டாயம் - புதிய மசோதாவில் மத்திய அரசு கட்டுப்பாடு
|இணைய அழைப்பு சேவை வழங்கும் செயலிகளான வாட்ஸ்அப், ஜூம், கூகுள் டியோ போன்றவை இந்தியாவில் இயங்குவதற்கு உரிமம் பெற வேண்டும் என்று புதிய மசோதாவில் மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி,
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம், புதிய வரைவு தொலைத்தொடர்பு மசோதா-2022-ஐ உருவாக்கி உள்ளது. அந்த மசோதா, பொதுமக்களிடம் கருத்து பெறுவதற்காக, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அக்டோபர் 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரைவு தொலைத்தொடர்பு மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
ஓ.டி.டி. நிறுவனங்களான வாட்ஸ்அப், ஜூம், கூகுள் டியோ போன்றவை இணைய அழைப்பு மற்றும் இணைய செய்தி அனுப்பும் சேவைகளை வழங்கி வருகின்றன.
வரைவு மசோதாவில், ஓ.டி.டி. சேவை, தொலைத்தொடர்பு சேவையில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட நிறுவனங்கள் இந்தியாவில் இயங்குவதற்கு உரிமம் பெற வேண்டும்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களோ அல்லது இணைய சேவை நிறுவனங்களோ தங்களது உரிமத்தை திரும்ப ஒப்படைத்தால் அவற்றுக்கு கட்டணம் திருப்பித்தரப்படும்.
அந்த நிறுவனங்களுக்கு நுழைவு கட்டணம், உரிம கட்டணம், பதிவு கட்டணம், அபராதம், கூடுதல் கட்டணம், வட்டி ஆகியவற்றை பகுதி அளவுக்கோ அல்லது முழுமையாகவோ தள்ளுபடி செய்யவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் இந்தியாவில் வெளியிடுவதற்காக அளித்த பத்திரிகை செய்திகள், இடைமறித்து ஆய்வு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
ஆனால், தேச பாதுகாப்பு, பொது பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இந்த விலக்கு பொருந்தாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.