< Back
தேசிய செய்திகள்
வாட்ஸ்அப் மோசடி:  வங்கி கணக்கில் இருந்து ரூ.21 லட்சம் இழந்த ஆசிரியை
தேசிய செய்திகள்

வாட்ஸ்அப் மோசடி: வங்கி கணக்கில் இருந்து ரூ.21 லட்சம் இழந்த ஆசிரியை

தினத்தந்தி
|
23 Aug 2022 7:35 PM IST

வாட்ஸ்அப்பில் வந்த செய்தியை திறந்து படித்த ஆசிரியை ஒருவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.21 லட்சம் பணம் பறிபோயுள்ளது.



அமராவதி,



ஆந்திர பிரதேசத்தின் அன்னமய்யா மாவட்டத்தில் மதனபள்ளி நகரில் ரெட்டப்பநாயுடு காலனியில் வசித்து வருபவர் வரலட்சுமி. ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் ஒன்று வந்துள்ளது. அதனுடன் லிங்க் ஒன்றும் இருந்துள்ளது.

அந்த லிங்க்-கை ஆசிரியை திறந்து பார்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, அவரது மொபைல் போனை ஹேக் செய்திருந்த நபர், தொடர்ச்சியாக அவரது வங்கி கணக்கில் இருந்து பல முறை பணம் பரிமாற்றம் செய்துள்ளார்.

தொடக்கத்தில் ரூ.20 ஆயிரம், ரூ.40 ஆயிரம் மற்றும் ரூ.80 ஆயிரம் என பணம் எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி மொத்தம் ரூ.21 லட்சம் வரை பணம் எடுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி இணையதள குற்ற பிரிவு போலீசாருக்கு வரலட்சுமி புகார் அளித்து உள்ளார்.

அடையாளம் தெரியாத நபரின் எண்ணில் இருந்து வந்த செய்தியை படித்த பின்னரே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டு உள்ளது. பணம் எடுக்கப்பட்ட செய்திகளும் அவருக்கு அடுத்தடுத்து வந்துள்ளன. இதுபற்றி வங்கி அதிகாரிகளிடம் சென்று கேட்டுள்ளார். அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டு உள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.

ஹேக்கர்கள், ஆசிரியையின் போன் மற்றும் பிற விவரங்களை ஹேக் செய்து, ரூ.21 லட்சம் பணம் வரை எடுத்துள்ளனர் என ஆசிரியை புகாராக தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, மற்றொரு சம்பவத்தில் மதனபள்ளியை சேர்ந்த மென்பொருள் பணியாளர் ஞானபிரகாஷ் என்பவரின் கணக்கில் இருந்து சமீபத்தில் ரூ.12 லட்சம் பணம் எடுக்கப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்