< Back
தேசிய செய்திகள்
பா.ஜனதா மேலிடம் எந்த பொறுப்பு கொடுத்தாலும் திறம்பட நிர்வகிப்பேன்-முன்னாள் மந்திரி சி.டி.ரவி பேட்டி
தேசிய செய்திகள்

பா.ஜனதா மேலிடம் எந்த பொறுப்பு கொடுத்தாலும் திறம்பட நிர்வகிப்பேன்-முன்னாள் மந்திரி சி.டி.ரவி பேட்டி

தினத்தந்தி
|
31 July 2023 12:15 AM IST

பா.ஜனதா மேலிடம் எந்த பொறுப்பு கொடுத்தாலும் திறம்பட நிர்வகிப்பேன் என்று முன்னாள் மந்திரி சி.டி.ரவி கூறினார்.

பெங்களூரு:-

கர்நாடக பா.ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி சி.டி.ரவி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உள்துறை மந்திரி அமித்ஷா

நான் பா.ஜனதாவின் தேசிய பொதுச் செயலாளராக இருந்தேன். அந்த பதவியை கட்சி மேலிடம் திரும்ப பெற்றுள்ளது. தற்போது நான் கட்சியின் சாதாரண தொண்டர். நான் டெல்லி சென்று எனது அலுவலகத்தை காலி செய்துவிட்டு வருகிறேன். நான் பூத் பொறுப்பாளர் பதவி முதல் பல்வேறு பதவிகளை நிர்வகித்துள்ளேன். நான் எப்போதும் கட்சிக்கு விசுவாசமாக இருப்பவன்.

டெல்லியில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண்-என் மக்கள் என்ற பெயரில் பாதயாத்திரை தொடங்கியுள்ளார். நான் அந்த மாநில பொறுப்பாளர் என்பதால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த பாதயாத்திரையை உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். அவருடன் நான் 2 நாட்கள் இருந்தேன்.

எனக்கு தெரியாது

எனக்கு கட்சி மாநில தலைவர் பதவி குறித்து அவரிடம் நான் எதுவும் விவாதிக்கவில்லை. கர்நாடக பா.ஜனதா தலைவர் பதவி எனக்கு கிடைக்கும் என்பது பற்றி எனக்கு தெரியாது. அதுபற்றி கட்சி மேலிடம் என்னிடம் எதுவும் விவாதிக்கவில்லை. கட்சி மாநில தலைவர் என்பது ஒரு பொறுப்பான பதவி. நான் அந்த பதவிக்கான போட்டியில் இல்லை. கட்சியில் எந்த பதவியையும் நான் கேட்டு பெற மாட்டேன்.

பா.ஜனதா மேலிடம் எனக்கு எந்த பொறுப்பை கொடுத்தாலும் அதை திறம்பட நிர்வகிப்பேன். கட்சி தலைவர் பதவியை யாருக்கு வழங்க வேண்டும், எப்போது வழங்க வேண்டும் என்பதை கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள். கட்சி தலைவர் பதவி எனக்கு கிடைக்கும் என்று தேவேகவுடா கூறியுள்ளார். அவர் மூத்த, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. ஆனால் கட்சி மேலிடத்தின் முடிவு என்ன என்பது எனக்கு தெரியாது.

40 சதவீத கமிஷன்

நான் 35 ஆண்டுகளாக பா.ஜனதாவில் உள்ளேன். தொடக்கம் முதலே எடியூரப்பாவின் ஆசியை பெற்று வந்துள்ளேன். அதே போல் தான் இப்போதும் அவரை சந்தித்து ஆசி பெற்றேன். இதில் விசேஷம் ஒன்றும் இல்லை. முந்தைய பா.ஜனதா அரசு மீது காங்கிரசால் கூறப்பட்ட 40 சதவீத கமிஷன் குறித்து விசாரணை நடத்தட்டும். யார்-யார் கமிஷன் பெற்றுள்ளனர் என்பதை பகிரங்கப்படுத்தட்டும்.

அதே போல் நைஸ் ரோடு திட்ட முறைகேடு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் இந்த அரசு மீதான மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.

இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.

மேலும் செய்திகள்