< Back
தேசிய செய்திகள்
மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் என்ன? முதல்-மந்திரி பிரேன் சிங் தினத்தந்திக்கு சிறப்பு பேட்டி
தேசிய செய்திகள்

மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் என்ன? முதல்-மந்திரி பிரேன் சிங் 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி

தினத்தந்தி
|
26 July 2023 7:00 AM IST

மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பிரேன் சிங் ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்து உள்ளார். அதில், வன்முறைக்கு காரணம் என்ன என்றும், அமைதி திரும்ப அரசு துரித நடவடிக்கை எடுத்து வருவது குறித்தும் விளக்கம் அளித்து உள்ளார்

இம்பால்,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது.

150 பேருக்கு மேல் பலியாகி உள்ள நிலையில், பெண்கள் மானபங்கம்படுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தால் நாடாளுமன்றம் முடங்கி உள்ளது.

'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி

மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து அந்த மாநில பா.ஜனதா முதல்-மந்திரி பிரேன் சிங் 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மணிப்பூர் கலவரத்திற்கு அடிப்படை காரணம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்:- மெய்தி சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என்று மணிப்பூர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக மணிப்பூரில் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் பழங்குடியின ஒற்றுமை அணிவகுப்பு கடந்த மே மாதம் 3-ந் தேதி நடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பு, வன்முறையாக மாறியதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் மோதல் உருவானது. இந்த அணிவகுப்பு நடத்தியவர்கள், போராட்டக்காரர்களை எல்லாம் ஒன்று திரட்டி, வன்முறைக்கு வித்திட்டனர். ஐகோர்ட்டு உத்தரவின் மீது மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிறகு ஏன் பேரணியில் வன்முறை?

மணிப்பூரில் மாநில அரசுக்கும், போதைப்பொருள் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. மியான்மர் நாட்டுடனான நமது எல்லை பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மணிப்பூர் மாநிலத்திற்குள் ஏராளமானோர் குடியேறி இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை, மணிப்பூர் தென்மாவட்டங்களில் (குக்கி இனத்தவர் வசிக்கும் பகுதி) உள்ளகிராமங்களில் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும், தற்போது மியான்மரில் ராணுவ ஆட்சி நடப்பதால் இந்த சட்டவிரோத குடியேற்றம் பன்மடங்கு உயர்ந்து உள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள், மணிப்பூரின் பாதுகாக்கப்பட்ட காடுகளில் பாப்பி என்னும் போதை பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு அங்குள்ள சில குழுக்கள் பாதுகாப்பு அளித்து வருகிறது.

அத்துமீறல்கள்

இந்த சட்டவிரோத குடியேற்றம், போதை பயிர் சாகுபடி மற்றும் வனப்பகுதிகளின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து மாநில அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நான் முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற 2017-ம் ஆண்டு முதல் போதைப்பொருள் மீதான போரை மாநில அரசு தொடங்கியது. இன்று வரை 18 ஆயிரத்து 600 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் பயிரிட்ட போதை பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளன. 275 கிலோ ஹெராயின், 1,750 கிலோ அபின், 1,100 கிலோ பிரவுன் சுகர் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு சர்வதேச சந்தையில் 4 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஆகும். போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் 2 ஆயிரத்து 518 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசின் இந்த நடவடிக்கை போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்டு உள்ளவர்களை கடுமையாக பாதித்து உள்ளது. எனவே மணிப்பூர் கலவரத்திற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கான பதில், சட்டவிரோத குடியேற்றம், போதை பொருள் கடத்தல், போதை பயிர் சாகுபடி மற்றும் காடுகளில் அத்துமீறல் ஆகியவற்றின் மீது மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என இவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்புப்படுத்தினால் உங்களுக்கும் மணிப்பூர் வன்முறையின் காரணம் புரியும்.

தீவிர பிரச்சினை

கேள்வி:- அப்படியென்றால் மணிப்பூர் கலவரத்திற்கு முக்கிய காரணம் குக்கி இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போதை செடிகளை அகற்றும் பணியை தீவிரப்படுத்தியதுதான் என்று சொல்கிறீர்களா?

பதில்:- மணிப்பூர் போதைப்பொருள் விவகாரம், தேச பாதுகாப்பில் ஒரு தீவிர பிரச்சினையாக இருந்து வருகிறது. இது இன்று, நேற்றல்ல. நீண்ட நாட்களாக இருந்து வரும் பிரச்சினை. எனவே நான் முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற 2017-ம் ஆண்டில் இருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவதற்கு, மாநில அரசு இடைவிடாத முயற்சிகளை எடுத்து வருகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் வன்முறையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

போதைப்பொருள் அனைத்து சமூகத்தினருக்கும் தீங்கானது. எனவே அதன் மீதான போர் எந்த ஒரு சமூகத்திற்கும் எதிரானதல்ல. போதைப்பொருள் ஒழிப்பு சட்ட வழக்குகளில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 2 ஆயிரத்து 518 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 873 பேர் குக்கி இன மக்கள், 1,083 பேர் முஸ்லிம்கள், 381 பேர் மெய்திகள். மீதமுள்ளவர்கள் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

அரசுக்கு சவால்

கேள்வி:- ஆனால் மணிப்பூர் கலவரங்களுக்கு நீங்களும், பா.ஜனதா கட்சியும்தான் காரணம் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார்களே?

பதில்:- மணிப்பூர் கலவரம், மாநிலத்திற்கும்-தேசத்தின் பாதுகாப்புக்கும் விடுக்கப்பட்ட ஒரு சவால். எனது அரசின் கவனம், மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பதாகும். விசாரணை கமிஷனின் அறிக்கை வந்தவுடன்தான் தற்போதைய நெருக்கடியின் உண்மைகள் பொது களத்தில் தெரியும். எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, அவை எப்போதும் ஆட்சியில் இருக்கும் கட்சியைக் குற்றம்சாட்டும்.

கேள்வி:- மணிப்பூரில் நடக்கும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உங்கள் அரசாங்கம் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது?

பதில்:- சட்டவிரோத குடியேற்றத்தை கண்டறிய மாநில அரசு, கடந்த பிப்ரவரி மாதத்தில் குக்கி சமுதாயத்தை சேர்ந்த மந்திரி தலைமையில் 3 பேர் கொண்ட மந்திரிசபை துணைக்குழுவை அமைத்தது. இந்த குழு மார்ச் மாதம், சட்டவிரோதமாக மணிப்பூரில் குடியேறியவர்களை கண்டறியும் பணியினை தொடங்கியது. அப்போது தெங்னவுபல், சந்தேல் மற்றும் சுராசந்த்பூர் பகுதிகளில் 29 இடங்களில், மொத்தம் 2 ஆயிரத்து 477 பேர் சட்டவிரோதமாக குடியேறியது கண்டறியப்பட்டது. இந்த கண்டறிதல் எண்ணிக்கை என்பது பனிப்பாறையின் மேல் உள்ள சிறிய முனைதான்.

இந்த சட்ட விரோத குடியேறிகளை கண்டறிந்து தற்காலிகமாக தடுப்பு முகாம்களில் தங்கவைக்க வேண்டும். அதன்பின் சூழ்நிலைகள் சாதகமாக அமையும் போது அவர்களை மியான்மருக்கு நாடு கடத்த வேண்டும். இதுதான் மாநில அரசின் திட்டம். ஆனால் தற்காலிக முகாம்கள் அமைக்கப்படுவதற்கு முன்பே, மோதல் தொடங்கிவிட்டது. மியான்மரில் இருந்து கடந்த 23-ந் தேதி மட்டும் மணிப்பூர் மாநிலத்திற்குள் 718 பேர் அகதிகளாக நுழைந்துள்ளனர்.

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மாநில போலீஸ், மாநில ஆயுதப்படைகள், மத்திய போலீஸ் படையின் 124 கம்பெனிகள் மற்றும் 180-க்கும் மேற்பட்ட ராணுவ கம்பெனிகள் அடங்கிய பாதுகாப்பு படை மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையைப் பராமரிப்பதற்காக நிலை நிறுத்தப்பட்டுள்ளன. மாநில காவல்துறை மற்றும் மத்திய படைகள் இணைந்து பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பகுதி மாவட்டங்களில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அங்கு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு இருந்த பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டு உள்ளன. இது சட்டவிரோத குடியேறிகளையும், அவர்களுக்கு ஆதரவு தருபவர்களையும் ஆத்திரமூட்ட செய்துள்ளது.

மணிப்பூர் கலவரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு, விசாரணை ஆணையத்தை அமைத்து உள்ளது. இந்த ஆணையம் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணையை உறுதி செய்வதற்காக மாநில அரசு விசாரித்து வந்த 6 முக்கியமான வழக்குகள், மத்திய புலனாய்வு (சி.பி.ஐ.) வசம் மாற்றப்பட்டு உள்ளன. மணிப்பூரில் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை மாநில அரசு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சட்டத்தை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். வன்முறையை மேலும் தூண்டக்கூடிய வதந்திகள் மற்றும் வீடியோக்கள் பரவுவதைத் தடுக்க இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் விரைவில் இயல்பு நிலையைக் கொண்டுவர, அனைத்து சமூகங்களின் உரிமைகளை கருத்தில் கொண்டு செயல்பட மாநில அரசு உறுதி பூண்டுள்ளது.

விசாரணை கமிஷன்

கேள்வி:- மணிப்பூர் கலவரத்தில் சுமார் 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். கொலைகளை தடுக்க நீங்கள் தவறிவிட்டதாக உணர்கிறீர்களா?

பதில்:- இந்த வன்முறையின் காரணங்களை தெளிவுப்படுத்தி இருக்கிறேன். இவற்றை ஆழமாக அணுகி நாம் தீர்வு காண வேண்டும். இந்த வன்முறையால் விலைமதிப்பற்ற பல உயிர்களை இழந்துவிட்டோம். வீடுகள் எரிக்கப்பட்டன, பல கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு படையினர், வன்முறைகளை கட்டுப்படுத்தி வருகின்றனர். நான் முன்பே குறிப்பிட்டது போல், விசாரணை கமிஷனின் அறிக்கை இறுதி செய்யப்பட்டவுடன்தான் தற்போதைய நெருக்கடியின் உண்மைகள் பொது களத்தில் தெரியும். எங்களது கவனம், மணிப்பூரில் இயல்பு நிலையையும், அமைதியையும் மீட்டெடுப்பதுதான்.

கேள்வி:- மெய்தி மக்களை மலைவாழ் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளதே? இதில் தங்கள் அரசின் நிலைப்பாடு என்ன?

பதில்:- இந்த பிரச்சினையின் முக்கிய தன்மையை கருத்தில் கொண்டு, ஐகோர்ட்டு உத்தரவின்படி மத்திய அரசுக்கு மாநில அரசு முறையான முன்மொழிவு எதுவும் செய்யப்படவில்லை. மேலும் மாநில அரசின் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பிப்பதற்கான கால அவகாசத்தையும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பேச்சுவார்த்தை

கேள்வி:- மணிப்பூர் கலவரம் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் அல்லவா?

பதில்:- இந்த வன்முறைக்கான காரணங்களை மக்கள் புரிந்து இருக்கிறார்கள். எனவே தேர்தலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. மணிப்பூரில் இயல்பு நிலை மற்றும் அமைதியை மீட்டெடுப்பதே எனது மற்றும் அரசாங்கத்தின் உடனடி முன்னுரிமை.

கேள்வி:- இந்த கலவரம் தொடர்பாக மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்:- மணிப்பூரில் உள்ள பல்வேறு சமூகங்கள் பல ஆண்டுகளாக ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்ந்து வருகின்றனர். மாநில அரசு யாருக்கும் அல்லது குறிப்பிட்ட சமூகத்திற்கும் எதிரானதல்ல. மாநிலத்தில் இருக்கும் பாதுகாப்பு படையினரின் முயற்சிகளுக்கு பொதுமக்களின் முழு ஆதரவை நான் கேட்டுக்கொள்கிறேன். யாரும் சட்டத்தை கையில் எடுக்க கூடாது. சுமூக பேச்சு மற்றும் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே அமைதி சாத்தியமாகும்.

துருப்புச்சீட்டு

கேள்வி:- மணிப்பூர் கலவரத்தில் வெளிநாட்டு சதி இருப்பதாக ஏற்கனவே கூறியிருக்கிறீர்கள்? அப்படியானால், அது எந்த நாட்டின் சதி?

பதில்:- மாநிலத்தில் நிலவும் சூழ்நிலைக்கு, வெளிநாட்டில் இருந்து சிலர் ஊக்கமளிக்கிறார்கள் என்று நான் சொல்வதற்கு வலுவான அறிகுறிகள் இருக்கின்றன. அதில் ஐரோப்பிய யூனியனும், ஐரோப்பிய நாடுகளும் கூட தங்கள் சொந்த நாடுகளில் நடக்கும் இது போன்ற அக்கிரமங்களை எல்லாம் மறைத்து, மணிப்பூர் மீது அதீத விவாதங்கள் செய்கின்றன. இந்த நாடுகள் போதைப்பொருள் பயங்கரவாதம் என்ற பிரச்சினைகளில் இருந்து திசை திருப்ப மதம்-சிறுபான்மையினர் என்ற துருப்புச் சீட்டினை பயன்படுத்தி ஒருதலைப்பட்சமான கதையை கூறுகின்றனர். இது ஓர் காலனித்துவ மனநிலை.

கேள்வி:- கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் இந்து-முஸ்லிம் கலவரம் நடந்தது. இப்போது மணிப்பூரில் மெய்தி (இந்துக்கள்) - குக்கி (கிறிஸ்தவர்கள்) இடையே கலவரம் நடக்கிறது. இந்த 2 கலவரங்களும் பா.ஜனதா ஆட்சியில் தானே நடந்து இருக்கிறது? பா.ஜனதா இந்துக்களை தூண்டி விடுவதாக எதிர்க்கட்சிகள் கூறுவது சரியானது என்று எடுத்து கொள்ளலாமா?

பதில்:- கடந்த மே 3-ந் தேதி நடந்த பேரணியால், மணிப்பூரில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலை மதத்துடன் தொடர்புடையது அல்ல. மெய்தி கிறிஸ்தவ தேவாலயங்கள், குக்கி கிறிஸ்தவர்களால் அழிக்கப்பட்டுள்ளன. குக்கி கிறிஸ்தவ தேவாலயங்கள், மெய்தி இந்துக்களால் அழிக்கப்பட்டுள்ளன. மெய்தி இந்து கோவில்கள், குக்கி கிறிஸ்தவர்களால் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு நாகா கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் பிற சமூகங்களைச் சேர்ந்த தேவாலயங்கள் கூட மெய்திகளால் தொடப்படவில்லை. இம்பால் நகரில் 400-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் உயர்ந்து நிற்கின்றன, இது மெய்தி ஆதிக்கம் செலுத்தும் பகுதி. நீங்கள் பார்க்கும் தவறான கண்ணோட்டமான, மதம் என்ற கோணத்தை பரப்பி, மோதலின் உண்மையான காரணங்களை மறைப்பது மிகவும் எளிது.

கேள்வி:- ஒரு வன்முறை கும்பல் 2 பெண்களை மானபங்கப்படுத்தும் வீடியோ நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க உள்ளீர்கள்?

பதில்:- கடந்த மே மாதம் 4-ந் தேதி நடந்த இந்த துரதிர்ஷ்டவசமான, மிகவும் மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். வீடியோவில் உள்ள பெண்கள் அனுபவித்து இருக்கும் துயரங்களை கற்பனை செய்வது கூட கடினம். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவிய பிறகுதான் இந்த சம்பவத்தின் கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது.

வீடியோ வெளிச்சத்திற்கு வந்த பிறகு, வீடியோவில் உள்ள குற்றவாளிகளை அடையாளம் காண முடியும் என்பதால் போலீசார் மிக வேகமாக செயல்பட்டனர். இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கும்பலில் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர், மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குற்றவாளிகளுக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனை (தூக்கு) வழங்க மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

மணிப்பூர் வன்முறை தொடர்பாக இதுவரை 6 ஆயிரத்து 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் பெண்களுக்கு எதிரான சம்பவங்களில் மட்டும் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை தனியே ஆய்வு செய்து வருகிறோம். பெண்கள் மற்றும் குழந்தைகளின் தேவைகளை உணர்ந்து நிவாரண முகாம்களில் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில், மோதலும் ஒரு அங்கமாக இருக்கிறது. எனவே சமூகங்களுக்கு இடையே மேலும் மோதலை தடுக்க பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர். கும்பல்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கும், மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்வதற்கும், மக்களைத் தூண்டுவதிலும் வதந்திகள் பெரும் பங்கு வகிக்கின்றன. வேலை மற்றும் படிப்பு தொடர்பான நோக்கங்களுக்காக இணையத்தை பயன்படுத்துபவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு இருக்கின்றனர். இருந்தாலும் வதந்திகள், வெறுக்கத்தக்க வீடியோக்கள் மற்றும் வன்முறைச் செயல்களைப் பரப்புவதை தடுக்க, நாங்கள் இப்போது கிட்டத்தட்ட 3 மாதங்களாக இணைய தளத்தை தடைசெய்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

யார் இந்த பிரேன் சிங்?

மணிப்பூர் முதல்-மந்திரியாக இருக்கும் பிரேன் சிங் (வயது 62) கால்பந்து விளையாட்டு வீரராக இருந்தவர். தனது சிறப்பான கால்பந்து ஆட்டத்தின் மூலம் விளையாட்டு பிரிவில் மத்திய பாதுகாப்பு படை பணியில் சேர்ந்தார். பின்னர் அதில் இருந்து விலகி 1992-ம் ஆண்டு மணிப்பூரில் உள்ள ஒரு நாளிதழில் பத்திரிகையாளராக தனது பணியினை தொடங்கினார். முன் அனுபவம் இல்லாவிட்டாலும், பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தனது அரசு பணியினை ராஜினாமா செய்தார். தொடர்ந்து 2002-ம் ஆண்டு ஜனநாயக புரட்சிகர மக்கள் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட பிரேன் சிங், சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் 2007-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைந்து கொண்டு விளையாட்டுத்துறை மந்திரி ஆனார். 2016-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்-மந்திரி ஆனார். அந்த மாநிலத்தின் முதல் பா.ஜனதா முதல்-மந்திரி என்ற பெருமையை அவர் பெற்றார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பிரேன் சிங் வரவேற்பு

மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு தமிழகத்தில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். மேலும் மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தமிழகத்தில் செய்து தரப்படும் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்த கேள்விக்கு மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் கூறியதாவது:-

மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் பல ஆண்டுகளாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். அவர்கள் மணிப்பூர் மாநிலம் மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது. தற்போதைய மணிப்பூர் சூழ்நிலையால் விளையாட்டு வீரர்களின் பயிற்சி பாதிக்கப்படக்கூடாது. இருந்தபோதிலும், தேசிய அளவில் ஆர்வமுள்ள எங்கள் விளையாட்டு வீரர்களுக்கு நாடு முழுவதும் உள்ள எவராலும் (மு.க.ஸ்டாலின்) வழங்கப்படும் பயிற்சிக்கு, அனைத்து ஆதரவையும் நாங்கள் வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்