பிரதமர் மோடி, அமித்ஷா நாட்டுக்கு செய்த தியாகம் என்ன?; சித்தராமையா கேள்வி
|பிரதமர் மோடி, அமித்ஷா நாட்டுக்கு செய்த தியாகம் என்ன? என்று பல்லாரி பொதுக்கூட்டத்தில் சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.
பெங்களூரு:
பல்லாரியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலுக்காக ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்துவதாக பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். தற்போது நாடு சாதி, மதத்தால் பிளவுப்பட்டு கிடக்கிறது. இதற்காக தான் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்துகிறார். அவரது இந்த பாதயாத்திரையை பா.ஜனதாவினர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. பா.ஜனதாவை சேர்ந்த மந்திரி ஸ்ரீராமுலு, நாட்டுக்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை, நேரு குடும்பம் நாட்டுக்காக என்ன செய்தது என்று கேள்வி எழுப்பி உள்ளார். நான் பா.ஜனதாவினரிடம் கேட்கிறேன், இந்த நாட்டுக்காக பிரதமர் மோடியும், அமித்ஷாவும் என்ன செய்திருக்கிறார்கள்.
பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு பழிவாங்கும் அரசியல் மட்டுமே நடக்கிறது. நாட்டில் மோதல், வன்முறை காரணமாக மக்கள் ஒருவித பயத்திலேயே இருக்கிறார்கள். இந்த நாட்டுக்காக ராகுல்காந்தி தனது குடும்பத்தையே தியாகம் செய்திருக்கிறார். நாட்டின் சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பங்கு என்ன என்று சொல்ல முடியுமா?. ராகுல்காந்தி பாதயாத்திரையால் காங்கிரஸ் கட்சிக்கு புதிய சக்தி கிடைத்துள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. இந்த பாதயாத்திரையால் பா.ஜனதாவினருக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.