மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மோடி அரசு கொண்டு வந்ததன் நோக்கம் என்ன? - மல்லிகார்ஜுன கார்கே கேள்வி
|மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மோடி அரசு கொண்டு வந்ததன் நோக்கம் என்ன? என்று மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைக்கப்படவில்லை. மாறாக நடிகர்-நடிகைகள் உள்பட பலர் அழைக்கப்பட்டு இருந்தனர். இது ஜனாதிபதிக்கு செய்த மிகப்பெரிய அவமதிப்பு ஆகும்.
நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டியபோது கூட அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. ஏனெனில் அவர்களுக்கு அவர் தீண்டத்தகாதவர். ஒரு தீண்டத்தகாதவர் மூலம் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தால், இயற்கையாகவே அதை கங்கை நீரால் கழுவ வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை பா.ஜனதா விரும்பாது. அப்படியிருக்க மோடி அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்ததன் நோக்கம் என்ன? ஏனெனில் ஏராளமான எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளதால், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் இந்த மசோதா குறித்து அவர்களுக்கு நினைவு வந்திருக்கிறது.
ராகுல், சோனியா மற்றும் நான் உள்ளிட்டோர் இணைந்து 'இந்தியா' என்ற யோசனையுடன் வந்ததால், மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்த யோசனை அவர்களின் மனதில் வந்துள்ளது.
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.