சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? - தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
|சவுக்கு சங்கரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புதுடெல்லி,
பெண் போலீசார் பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்டதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவரது தாயார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் அவரது தாயார் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த்குமார் அடங்கிய அமர்வு கடந்த 4 நாட்களுக்கு முன்பு விசாரித்தது.
அப்போது, விசாரணையில் இருந்து விலகுவதாக தெரிவித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், தான் இடம்பெறாத அமர்வு முன்பு இந்த மேல்முறையீட்டு மனுவை பட்டியலிட தலைமை நீதிபதிக்கு கோப்பை அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் புதிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? சவுக்கு சங்கரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? மனம் போன போக்கில் குண்டர் சட்டத்தை பயன்படுத்துவதை ஏற்க முடியாது. அதே சமயத்தில் சவுக்கு சங்கரின் நடத்தையும் மன்னிக்க முடியாததே என்று கூறினர்.
மேலும் சவுக்கு சங்கரை ஏன் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 18-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.