< Back
தேசிய செய்திகள்
நாட்டின் இளம் சபாநாயகர் ராகுல் நர்வேகரின் பின்னணி என்ன...?
தேசிய செய்திகள்

நாட்டின் இளம் சபாநாயகர் ராகுல் நர்வேகரின் பின்னணி என்ன...?

தினத்தந்தி
|
3 July 2022 6:44 PM IST

மராட்டிய சட்டசபை சபாநாயகராக வெற்றி பெற்ற நாட்டின் இளம் சபாநாயகர் ராகுல் நர்வேகரின் பின்னணி பற்றி தெரிந்து கொள்வோம்.



புனே,




மராட்டிய சட்டசபையில் காங்கிரசின் நானா பட்டோலே 2021ம் ஆண்டு பிப்ரவரியில் சபாநாயகர் பதவியில் இருந்து விலகி மராட்டிய காங்கிரஸ் தலைவர் பொறுப்பினை ஏற்றார். இதனால், சபாநாயகர் பதவி காலியானது. இதனை தொடர்ந்து துணை சபாநாயகர் நர்ஹாரி ஜிர்வால் அவையின் சபாநாயகர் பொறுப்பினை வகித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியான பின்னர், சபாநாயகர் தேர்தல் நடத்த முடிவானது. இதில், பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ. ராகுல் நர்வேகரை (வயது 45) சபாநாயகர் ஆக்கும் பணிகளில் அக்கட்சி மும்முரமுடன் ஈடுபட்டது. இன்று காலை 11 மணியளவில் ஓட்டெடுப்பு நடந்தது.

இதன்படி, இன்று நடந்த மராட்டிய சட்டசபை சபாநாயகர் தேர்தலில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வேட்பாளர் ராஜன் சால்வியை விட 50 வாக்குகள் கூடுதலாக, பா.ஜ.க. உறுப்பினர் ராகுல் நர்வேகர் பெற்றார். 164 வாக்குகளை பெற்ற அவர் வெற்றி பெற்றார்.

இதனால், மராட்டிய சட்டசபை சபாநாயகர் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. நர்வேகருக்கு ஆதரவாக 164 வாக்குகளும், எதிராக 107 வாக்குகளும் பதிவாகின. இதனை தொடர்ந்து, ஆதரவு உறுப்பினர்கள் அவையில் ஜெய் பவானி, ஜெய் சிவாஜி மற்றும் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.

வெற்றி பெற்ற நர்வேகர், மராட்டியத்தின் மும்பை நகரில் உள்ள கொலாபா சட்டசபை தொகுதியை சேர்ந்த உறுப்பினர். அவர் முன்னாள் சிவசேனா உறுப்பினர். ஆனால், 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால், அவர் தேசியவாத காங்கிரசின் வேட்பாளராக மவால் தொகுதியில் போட்டியிட்டார். எனினும், அதில் தோல்வியை தழுவினார். ஆனால், மராட்டிய மேலவை கவுன்சிலுக்கு தேர்வு செய்யப்பட்டு 2019ம் ஆண்டு வரை அதன் உறுப்பினராக இருந்துள்ளார்.

ராகுல் நர்வேகர், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மராட்டிய மேலவை கவுன்சில் தலைவரான ராம்ராஜே நாயக் நிம்பல்கரின் மருமகன் ஆவார். இவரது தந்தை கொலாபா பகுதியின் நகராட்சி கவுன்சிலர் ஆவார். இவரது சகோதரர் மற்றும் மைத்துனி முறையே 227 மற்றும் 226 வார்டுகளின் கவுன்சிலராகவும் உள்ளனர்.

அவர் பா.ஜ.க.வில் சேர்ந்து கொலாபா தொகுதியில் போட்டியிட சீட் பெற்று, அதில் வெற்றியும் பெற்று சட்டசபை உறுப்பினரானார். தற்போது, சட்டசபை சபாநாயகர் பொறுப்புக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதனால், நாட்டின் மிக இளம் வயது சபாநாயகர் என்ற அந்தஸ்தும் பெற்றுள்ளார். இந்த சபாநாயகர் தேர்தலில் 12 பேர் வரவில்லை. 3 உறுப்பினர்கள் ஓட்டெடுப்பில் இருந்து விலகி இருந்தனர்.

மேலும் செய்திகள்