சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற என்ன அவசியம்...? 'ராவ்ஸ் ஐ.ஏ.எஸ். ஸ்டடி சர்க்கில்' தலைமை செயல் அதிகாரி தகவல்
|சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற கடின உழைப்பு, திறமையான அணுகுமுறை மற்றும் சரியான வழிகாட்டுதல் அவசியம் என்று ‘ராவ்ஸ் ஐ.ஏ.எஸ். ஸ்டடி சர்க்கில்’ தலைமை செயல் அதிகாரி அபிஷேக் குப்தா தெரிவித்தார்.
சென்னை,
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தக்கூடிய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான தேர்வை எதிர்கொள்வது எப்படி? அந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கு அவசியமானவை எவை? என்பது குறித்து 'ராவ்ஸ் ஐ.ஏ.எஸ். ஸ்டடி சர்க்கில்' தலைமை செயல் அதிகாரி அபிஷேக் குப்தா விளக்கி கூறினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராவது கடினமான, பயனளிக்கும் முயற்சி ஆகும். முதலில் யு.பி.எஸ்.சி. தேர்வு முறை, பாடத்திட்டம் மற்றும் கேள்விகள் ஆகியவற்றை புரிந்து கொள்வது வெற்றிக்கு வழிவகுக்கும். பாடத்திட்டத்தை விரிவாக ஆய்வு செய்து முக்கியமானதை தேர்வு செய்து படிக்க வேண்டும். தொடர் பயிற்சி என்பது அவசியம்.
நடப்பு விவகாரங்களை தெரிந்து கொள்வது முக்கியம். அதேநேரத்தில் வரலாறு, புவியியல், அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் போன்ற பாடங்களில் வலுவான அடித்தளம் கொண்டிருக்க வேண்டும்.
பதில் அளிக்கும் யுக்தியை மேம்படுத்த வேண்டும். கேள்விக்கு ஏற்ற பதிலை வழங்குவதில் தனிப்பட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. பாடத்திட்டம் சார்ந்த பாடங்களை ஓராண்டு சீரான முறையில் படிப்பது கட்டாயம். தினசரி, வாராந்திர பாட அட்டவணையை தயாரித்து அதனை கொண்டு படிக்க வேண்டும். அவ்வப்போது முன்னேற்றத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்.
உடல்நலனை காக்க குறிப்பிட்ட இடைவெளியில் ஓய்வும் தேவை. கூட்டாக சேர்ந்து படித்தால், படிப்பதற்கான நிலையான வேகத்தை அமைக்கவும், ஊக்கத்தை பராமரிக்கவும், போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கவும் முடியும். சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெற கடினமான உழைப்பு மட்டுமல்லாது, திறமையான அணுகுமுறையும் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சரியான வழிகாட்டுதலும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.