9 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் சாதனை என்ன? கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கேள்வி
|9 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் சாதனை என்ன? என்று முதல்-மந்திரி சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
பா.ஜனதா பதிலளிக்கவில்லை
பிரதமர் மோடி தலைமையிலான மோசமான பா.ஜனதா ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு குழு அமைத்து இருப்பது, பொது வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி இருப்பது வரவேற்புக்குரியது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கண்டு பா.ஜனதாவுக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் ஆலோசனைகள் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது. மத்திய அரசின் மக்கள் விரோத நிலைப்பாடு, தொழில் அதிபர்களுடன் சேர்ந்து கொள்ளையடிப்பது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பா.ஜனதா பதிலளிக்கவில்லை.
அதானி முறைகேடுகள்
அதானி மீது பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளன. ஆனால் அவரை பிரதமர் மோடி பாதுகாக்கிறார். அதானி முறைகேடுகள் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் கேட்கின்றன. ஆனால் இந்த விஷயத்தில் பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் அவசரமாக கூட்டப்பட்டுள்ளது. இதில் ஒரே நாடு, ஒரே தேர்தல் விஷயம் குறித்து பேசப்பட உள்ளதாக கூறி மக்களின் கவனம் திசை திருப்பப்பட்டுள்ளது. நமது பெருமைமிகு இஸ்ரோ வி்ஞ்ஞானிகளின் சாதனையை தமது கட்சியின் சாதனை என்பது போல் வெளிப்படுத்த பிரதமர் மோடி முயற்சி செய்கிறார். இதை நான் கண்டிக்கிறேன். இஸ்ரோவின் சாதனைக்கு விஞ்ஞானிகள் மட்டுமே தகுதியானவர்கள்.
ேமாடி அரசின் சாதனை
ஜி20 நாடுகள் சபை கூட்டம் நடத்துவதை தனது சாதனை என்று வெளிப்படுத்த பா.ஜனதா முயற்சி செய்கிறது. பொது சிவில் சட்டம், மக்கள்தொகை கட்டுப்பாடு உள்ளிட்ட சட்ட மசோதாக்கள் குறித்து அதிகமாக பேசும் வகையில் இந்த அரசு செயல்படுகிறது. இஸ்ரோ சாதனையை கண்டு நாடு பெருமை கொள்கிறது. ஆனால் 9 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் சாதனை என்ன?.
பண மதிப்பிழப்பு திட்டம், வேலையின்மை அதிகரிப்பு, தொழில் அதிபர்களின் முறைகேட்டுக்கு உதவி செய்தது, மத மோதல், இன மோதல்களை தூண்டிவிட்டது போன்றவை தான் மோடி அரசின் சாதனை ஆகும்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.