தேர்தல் பத்திரம் என்றால் என்ன? அதை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது ஏன்?
|தேர்தல் பத்திரங்களைப் பெற்ற அரசியல் கட்சிகள், 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுகளின்றி பத்திரங்களை பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
இந்திய அரசியல் கட்சிகள், ஒருவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை பெற்றால், அதன் முழு விவரத்தையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டம் வழிவகை செய்திருந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்த மோடி தலையிலான அரசு, மத்திய பட்ஜெட்டில் இந்த சட்டத்தை திருத்தம் செய்து, தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்ததுஇந்த தேர்தல் பத்திரம் திட்டம், 2018ஆம் ஆண்டு அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் தனிநபர், நிறுவனங்கள் வங்கியில் இருந்து எத்தனை தேர்தல் பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கி, தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடைகளைப் பெற்ற அரசியல் கட்சிகள், அதை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை. இந்த தேர்தல் பத்திரங்களை ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும்.
அதேபோல், பொதுத் தேர்தல் காலத்தில் தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொள்ள கூடுதலாக 30 நாட்கள் மத்திய அரசால் அனுமதி வழங்கப்படும். இந்திய குடிமகனாக இருக்கும் யார் வேண்டுமானாலும், இப்பத்திரத்தை வாங்கிக் கொள்ளலாம். 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 29 ஏ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தேர்தல்களில் 1 சதவீதம் குறைவில்லாத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் பத்திரத்தை வழங்க முடியும்.
தேர்தல் பத்திரங்களைப் பெற்ற அரசியல் கட்சிகள், 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுகளின்றி பத்திரங்களை பணமாக மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு இல்லையெனில், தேர்தல் பத்திரத்தொகை, பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பத்திரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிடுகிறது. வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
பொதுவாக ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். எனினும் தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு மாதத்தில் 30 நாட்கள் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். இத்திட்டத்தில் நிதி கொடுப்போரின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படுவதால், கருப்பு பண புழக்கத்தை ஊக்குவிக்கும் எனவும், இத்திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், இத்திட்டத்தை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.