எனக்கு அசைவ உணவு தான் வேண்டும் என கேட்ட காதல் மனைவிக்கு நேர்ந்த கதி...
|உத்தர பிரதேசத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது, எனக்கு அசைவ உணவு தான் வேண்டும் என கேட்ட காதல் மனைவியுடன் தகராறு ஏற்பட்டு உள்ளது.
ஷாம்லி,
உத்தர பிரதேசத்தில் ஷாம்லி மாவட்டத்தில் பந்திகேரா கிராமத்தில் வசித்து வருபவர் அன்ஷூ. இவரது காதல் மனைவி ஈஷா என்ற நயீமா. 20 வயது பருவத்தினர். இருவரும் காதல் செய்து, 10 மாதங்களுக்கு முன்பு கோர்ட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளி கிழமை பந்திகேரா கிராமத்தின் கிணறு ஒன்றில் இருந்து ஈஷாவின் உடல் மீட்கப்பட்டது. இதுபற்றி அவரது குடும்பத்தினர் அன்ஷூ மீது குற்றச்சாட்டு தெரிவித்து போலீசில் புகார் அளித்தனர்.
இதுபற்றி ஷாம்லி மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரெண்டு ஓ.பி. சிங் கூறும்போது, இந்த விவகாரத்தில் அன்ஷூவிடம் விசாரணை நடத்தியதில் அவர் நடந்த விசயங்களை வெளியிட்டார்.
கடந்த மார்ச் 29-ந்தேதி நவராத்திரி கொண்டாட்டத்தின்போது, எனக்கு அசைவ உணவு தான் வேண்டும் என ஈஷா கேட்டதுடன், வெளியேயும் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில் விவசாயத்திற்கு பயன்படும் ஆயுதம் ஒன்றால், அன்ஷூ தனது காதல் மனைவியை கடுமையாக தாக்கி உள்ளார். இதில் உயிரிழந்த அவரது உடலை கிணறு ஒன்றில் போட்டு உள்ளார் என தெரிவித்து உள்ளார். அதன்பின் உடல் விரைவில் அழுகி போவதற்காக அதன் மீது உப்பு தூவியும் விட்டு உள்ளார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அன்ஷூ பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.