காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?; பரபரப்பு தகவல்கள்
|கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் தங்களின் குறைகளை கொட்டித்தீர்த்தனர். மந்திாிகள் தங்களின் பரிந்துரைகளை மதிப்பது இல்லை என்றும், அதிகாரிகள் தங்களின் பேச்சை கேட்பது இல்லை என்றும் புகார் கூறினர். தங்களின் அதிருப்தியை சித்தராமையாவுக்கு சில எம்.எல்.ஏ.க்கள் கடிதம் மூலம் தெரிவித்து இருந்தனர். இதற்கு சித்தராமையா ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.
என்னிடம் பி.ஆர்.பட்டீல் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் நேரடியாக வந்து உங்களின் பிரச்சினைகளை கூறி இருந்தால், அதை நான் தீர்த்து வைத்திருப்பேனே என்று கோபமாக கூறினார்.
இந்த கூட்டத்தில் பி.ஆர்.பட்டீல் எம்.எல்.ஏ. பேசும்போது, "என்னை குற்றவாளி இடத்தில் நிறுத்த வேண்டாம். நல்ல நோக்கத்துடன் தான் நான் உங்களுக்கு கடிதம் எழுதினேன். மந்திரிகள் எங்களை மதிக்க வேண்டும். அவர்கள் உரிய மரியாதை வழங்காததால் தான் உங்களுக்கு கடிதம் எழுதினேன். வேண்டுமானால் நான் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன். நான் கடிதத்தில் என்ன குறிப்பிட்டுள்ளேனோ அதில் இப்போதும் உறுதியாக உள்ளேன்" என்றார்.
அவரது இந்த கருத்தை ஆதரித்து பேசிய மற்றொரு எம்.எல்.ஏ.வான யஷ்வந்த் ராயகவுடா, "பி.ஆர்.பட்டீல் கூறிய கருத்தை நான் ஆதரிக்கிறேன். அவரது கடிதத்தை நன்றாக படித்த பிறகே அதில் நான் கையெழுத்து போட்டேன். முதலில் மந்திரிகள் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் ஒன்றும் எளிதாக எம்.எல்.ஏ. பதவிக்கு வந்துவிடவில்லை. எங்களுக்கு தன்மானம், மரியாதை இல்லாவிட்டால் இந்த பதவியே வேண்டாம். நானும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயார்" என்று பேசியதாக தகவல் வௌியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து பேசிய பசவராஜ் ராயரெட்டி எம்.எல்.ஏ., "சார் நான் கடிதம் எழுதவில்லை. அவர்கள் எழுதிய கடிதத்தில் நான் கையெழுத்து போட்டேன். உங்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் கையெழுத்து போட்டேன்" என்றார்.
கூட்டத்தில் இருந்து பி.ஆர்.பட்டீல் வெளிநடப்பு செய்ய முயற்சி செய்தார். அவரை சக எம்.எல்.ஏ.க்கள் சமாதானம் செய்து உள்ளே அமர வைத்தனர்.
அதன் பிறகு பேசிய விஜயானந்த் காசப்பன்னவர், சங்கமேஸ்வர் ஆகியோர், தங்களை மந்திரிகள மதிப்பது இல்லை என்றும், தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை தங்களின் தொகுதிகளில் நியமிக்க வேண்டும் என்றும் பேசினர். மேலும் ராய்ச்சூர் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், என்.எஸ். போசராஜுக்கு மந்திரி பதவி வழங்கியதற்கு கடும் அதிருப்தி தெரிவித்தனர். அவர்களை சித்தராமையா சமாதானப்படுத்தினர்.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நிறைவடைந்த பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டும்படி சிலர் கடிதம் கொடுத்தனர். அதன் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை கூட்டினோம். எம்.எல்.ஏ.க்கள் தங்களின் தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசினர். யாருக்கும் எந்த அதிருப்தியும் இல்லை" என்றார்.