< Back
தேசிய செய்திகள்
2004ல் நடந்தது போலவே இப்போதும் நடக்கும் - ஜெய்ராம் ரமேஷ்
தேசிய செய்திகள்

2004ல் நடந்தது போலவே இப்போதும் நடக்கும் - ஜெய்ராம் ரமேஷ்

தினத்தந்தி
|
2 Jun 2024 5:08 PM IST

கருத்துக்கணிப்பு ஒரு உளவியல் ரீதியான விளையாட்டு என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற்றது. நேற்று 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது.

தொடர் ஓட்டம் போல் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற ஆவல் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்தநிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள், கருத்துக்கணிப்பில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை எடுத்தன.

நேற்று மாலை 6 மணிக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிவடைந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் பா.ஜனதா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

2004-ல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துத்துக்கணிப்புகள் அனைத்தும் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசு மீண்டும் ஆட்சியமைக்கும் எனச்சொன்னார்கள். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரலாறு திரும்பும்.இந்த கருத்துக்கணிப்பு ஒரு உளவியல் ரீதியான விளையாட்டு. ஜூன் 4-ல் இந்த எண்ணிக்கையில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும். இந்தியா கூட்டணி 295 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும் என்றார்.

மேலும் செய்திகள்