< Back
தேசிய செய்திகள்
சபர்மதி ஆசிரம பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி எழுதிய விசயங்கள் என்ன?
தேசிய செய்திகள்

சபர்மதி ஆசிரம பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி எழுதிய விசயங்கள் என்ன?

தினத்தந்தி
|
13 March 2024 7:50 AM IST

காந்தியின் செய்தியை முழு அளவில் புரிந்து கொண்டு அதனை செயல்படுத்தி, ஒரு சிறந்த மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்கும் பணியில் நாம் முன்னோக்கி செல்கிறோம் என பிரதமர் மோடி அதில் குறிப்பிட்டு உள்ளார்.

ஆமதாபாத்,

குஜராத்தில் ஆமதாபாத் நகரில் அமைந்துள்ள சபர்மதி ஆசிரமத்தில் ரூ.1,200 கோடி மதிப்பிலான காந்தி ஆசிரம நினைவகம் உருவாவதற்கான மகாதிட்டம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த ஆசிரமம் சபர்மதி ஆற்றங்கரையில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

விடுதலை போரின்போது, மகாத்மா காந்தி முன்னெடுத்த தண்டி யாத்திரை அல்லது உப்பு சத்தியாக்கிரக யாத்திரையின் ஆண்டு தின கொண்டாட்டம் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், மறுசீரமைக்கப்பட்ட கோச்ராப் ஆசிரமம் திறந்து வைக்கப்பட்டது.

இதன்பின்னர், மகாத்மா காந்தியின் கருத்துகள் மற்றும் தத்துவம் பற்றிய தன்னுடைய எண்ணங்களை பார்வையாளர்களுக்கான புத்தகத்தில் பிரதமர் மோடி பதிவிட்டார். அதில், உலகளவில் காணப்படும் எண்ணிலடங்கா சவால்களுக்கான தீர்வை, சமூக மற்றும் ஆன்மீக அடிப்படையிலான காந்தியின் கண்ணோட்டத்தில் இருந்தே பெறலாம்.

அவருடைய செய்தியை முழு அளவில் புரிந்து கொண்டு அதனை செயல்படுத்தி, ஒரு சிறந்த மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்கும் பணியில் நாம் முன்னோக்கி செல்கிறோம் என அதில் குறிப்பிட்டு உள்ளார். சபர்மதி ஆசிரமம் மறுசீரமைப்புக்கு பின்னர், காந்தியின் பணி மற்றும் அவருடைய வாழ்க்கையானது இளைஞர்களுக்கு உந்துதலாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்றும் அதில் அவர் தெரிவித்து உள்ளார்.

சபர்மதி ஆசிரமம் மறுசீரமைப்புக்கான மகாதிட்டத்திற்கான பணியின்படி, 120 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள அனைத்து 36 கட்டிடங்களும் மீட்டெடுக்கப்படுவதுடன், ஆசிரமத்தில் உள்ள 63 அமைப்புகளில் 50 சதவீதம் அளவுக்கு மீட்டெடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு மற்றும் மறுகட்டமைப்பும் செய்யப்பட உள்ளன.

மேலும் செய்திகள்