< Back
தேசிய செய்திகள்
பாஜக நல்லது என கூறுவது நாட்டிற்கு கேடு - ராகுல்காந்தி
தேசிய செய்திகள்

பாஜக நல்லது என கூறுவது நாட்டிற்கு கேடு - ராகுல்காந்தி

தினத்தந்தி
|
21 Jun 2022 8:53 PM IST

பாஜக நல்லது என கூறுவது நாட்டிற்கு கேடானது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

முப்படைகளில் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் பணி என்ற அடிப்படையில் ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு வடமாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்க்கும் நடைமுறைகளை ராணுவம், கடற்படை தொடங்கிவிட்டது. இதற்கான அறிவிப்புகளை முப்படைகளும் வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே, அக்னிபத் திட்டத்திற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த திட்டத்தை கைவிடக்கோரி காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேலை அக்னிபத் திட்டம் தொடர்பாக கர்நாடகாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சில முடிவுகள் தற்போது ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் காலப்போக்கில் அந்த முடிவுகளின் நன்மைகளை நாடு உணரும்' என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அக்னிபத் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்த கருத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் அவர்களே காலப்போக்கில் பலன் தரும் என நீங்கள் செய்த சீர்திருத்தங்களால் நாட்டு மக்கள் தினம் தினம் அவதிப்பட்டு வருகின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, தவறான ஜிஎஸ்டி, குடியுரிமை திருத்தச்சட்டம், பணவீக்கம் அதிகரிப்பு, வேலையின்மை அதிகரிப்பு, வேளாண் சட்டங்கள் தற்போது அக்னிபத் திட்டம். பாஜக நல்லது என கூறுவது நாட்டிற்கு கேடானது' என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்