< Back
தேசிய செய்திகள்
திரிணாமுல் காங். தலைவருக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டம் - சந்தேஷ்காளி கிராமத்தில் நடந்தது என்ன?
தேசிய செய்திகள்

திரிணாமுல் காங். தலைவருக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டம் - சந்தேஷ்காளி கிராமத்தில் நடந்தது என்ன?

தினத்தந்தி
|
14 Feb 2024 5:52 PM IST

போலீஸ் குழுவினர் மற்றும் தேசிய மகளிர் ஆணைய குழுவினர் நேற்று சந்தேஷ்காளி கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தி புகார் மனுக்களை பெற்றனர்.

புதுடெல்லி:

மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ளது சந்தேஷ்காளி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த பெண்கள் கடந்த சில தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷேக் ஷாஜகானின் கும்பல் தங்கள் நிலங்களை அபகரித்துக் கொண்டதாகவும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் குற்றம்சாட்டுகின்றனர். ஷாஜகானை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

ஆனால், கடந்த மாதம் ஷாஜகானின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் இருந்து அவர் தலைமறைவாக உள்ளார். சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர், ஷாஜகான் உதவியாளருக்கு சொந்தமான இடங்களுக்கு தீவைத்தனர்.

இந்த விவகாரம் மேற்கு வங்காள மாநிலத்தில் பற்றி எரியத் தொடங்கி உள்ளது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த பா.ஜ.க. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சட்டமன்றத்திலும் பிரச்சினை எழுப்பியது. பா.ஜ.க. தலைவர் சுகந்தா மஜும்தார் தலைமையில் பாசிர்ஹாட்டில் உள்ள எஸ்.பி. அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

பதற்றம் நிலவுவதால் சந்தேஷ்காளி கிராம பஞ்சாயத்து உட்பட 7 கிராம பஞ்சாயத்துகளில் வரும் 19 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தங்கள் கோரிக்கை குறித்து பேசிய மஜும்தார், "சந்தேஷ்காளியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஷேக் ஷாஜகான் அவரது உதவியாளர்கள் ஷிபு ஹஜ்ரா, உத்தம் சர்தார் ஆகியோர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைப்பதற்காக அமைதியாக எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தோம். குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால், சந்தேஷ்காளியில் உள்ள பெண்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?" என கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரத்தில் ஷேக் ஷாஜகானுக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உதவி செய்வதாக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டினார். திருமணமான இளம் இந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த நபரை, மம்தா இப்போது கட்சி அலுவலகத்திற்கு வர அனுமதிப்பார். பெங்காலி இந்து பெண்களைக் கூட்டு பலாத்காரம் செய்ததாக சந்தேஷ்காளி பெண்களால் குற்றம் சாட்டப்பட்ட இந்த நபர் யார்? ஷேக் ஷாஜகான் எங்கே இருக்கிறார்? என்ற கேள்விக்கு மம்தா பதில் அளிக்க வேண்டும் என ஸ்மிருதி இரானி கூறியிருந்தார்.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் அந்த கிராமத்திற்கு சென்று போராடும் பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தங்கள் அடையாளத்தை காட்ட விரும்பாத வெண்கள், சேலையால் முகத்தை மூடிக்கொண்டு, கண்ணீர் விட்டு அழுதபடி கவர்னரிடம் முறையிட்டதுடன், தங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்டனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த அவர், இந்த சம்பவம் குறித்து மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளார்.

பெண்களின் குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதற்காக டி.ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி தலைமையில் 10 பேர் கொண்ட ஒரு குழுவை மேற்கு வங்காள அரசு அமைத்துள்ளது.

மாநிலத்தையே உலுக்கிய இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்து விசாரிப்பதற்காக இரண்டு விசாரணைக் குழுவினர் (போலீஸ் குழு மற்றும் தேசிய மகளிர் ஆணைய குழு)நேற்று சந்தேஷ்காளி கிராமத்திற்கு சென்றனர். அப்போது, பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றனர். அதில், நில அபகரிப்பு, தாக்குதல், துன்புறுத்தல், சம்பள பாக்கி, மானபங்கம், அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. ஆனால், பாலியல் பலாத்காரம் அல்லது பாலியல் தொந்தரவு குறித்து புகாரில் எதுவும் கூறப்படவில்லை.

மேற்கு வங்காளத்தில் காட்டு தர்பார் நடப்பதாகவும், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலகவேண்டும் என்றும் பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மேற்கு வங்காளத்தில் காட்டு தர்பார் நடக்கிறது. பழங்குடியினத்தைச் சேர்ந்த எங்கள் சகோதரிகள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்படுகிறார்கள். முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அதுபற்றி வாய் திறக்காமல் அமைதியாக இருக்கிறார். மேற்கு வங்காளத்தில் சட்டத்தின் ஆட்சி இல்லை. மாறாக அராஜக ஆட்சியாளர் மம்தா பானர்ஜியின் சட்டமே உள்ளது.

எனவே, மம்தா பானர்ஜி தனது பதவியில் நீடிக்க உரிமை இல்லை. நீங்கள் ராஜினாமா செய்யவில்லை என்றால், மக்களால் தூக்கி எறியப்படுவீர்கள், அது நிச்சயம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்