< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்காள வன்முறை; போலீசார் உச்சபட்ச அமைதி காத்தனர்:  திரிணாமுல் காங்கிரஸ்
தேசிய செய்திகள்

மேற்கு வங்காள வன்முறை; போலீசார் உச்சபட்ச அமைதி காத்தனர்: திரிணாமுல் காங்கிரஸ்

தினத்தந்தி
|
14 Sept 2022 10:11 AM IST

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. வன்முறையில் ஈடுபட்டபோதும் ஒரு ரவுண்டு கூட போலீசார் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.



கொல்கத்தா,



மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசின் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் முன்னாள் மந்திரிகள் சிலர், பல கோடி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, கைது செய்யப்பட்டு, வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனை முன்னிட்டு அரசின் ஊழலுக்கு எதிராக கொல்கத்தா நகரில் பா.ஜ.க. சார்பில் நபன்னா அபியான் என்ற பெயரில் பேரணி ஒன்று நடத்துவது என முடிவானது. இதில் பங்கேற்க மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளில் இருந்து பா.ஜ.க. தொண்டர்கள் கொல்கத்தா நகருக்கு படையெடுத்தனர்.

எனினும், ராணிகஞ்ச், போல்பூர் மற்றும் துர்காப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு வெளியே மற்றும் பல இடங்களில் போலீசார் அவர்களை வரவிடாமல் தடுத்தனர். இதனால், பா.ஜ.க. தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நேற்று கடுமையான மோதல் ஏற்பட்டது. பா.ஜ.க.வினர் பலரை போலீசார் கைது செய்து, தடுப்பு காவலுக்கு கொண்டு சென்றனர்.

இந்த பேரணியை தடுப்பதற்காக கொல்கத்தா எல்லை பகுதிகள், ஹவுரா நகரின் முக்கிய சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. அவர்கள் அந்த வழியில், தடுப்பு வேலிகளை அமைத்து வாகனங்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ்காரர் மற்றும் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளராக செயல்பட்ட, பா.ஜ.க.வை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி கூறும்போது, முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு மக்கள் ஆதரவு இல்லை. அதனால், சர்வாதிகார போக்கை அவர் கையாளுகிறார்.

வடகொரியா போன்று வங்காளம் உள்ளது. போலீசார் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அவர்கள் விலை கொடுப்பார்கள். பா.ஜ.க. வந்து கொண்டிருக்கிறது என கூறினார்.

இதனை தொடர்ந்து, பா.ஜ.க. பேரணியில் கலந்து கொள்ள சென்ற சுவேந்து அதிகாரி, ராகுல் சின்கா மற்றும் பெண் எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களை லால்பஜாரில் உள்ள கொல்கத்தா காவல் துறை தலைமையகத்திற்கு கொண்டு சென்றனர்.

கொல்கத்தா நகரின் ஒரு பகுதி நேற்று போர்க்களம் போன்று காட்சியளித்தது. ஒரு புறம் கற்களை வீசியும், கம்புகளால் அடித்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. மற்றொரு புறம் கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் தண்ணீர் பீய்ச்சியடித்து தொண்டர்களை கலைந்து போக செய்வதும் நடந்தது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் போலீசாரின் கார் ஒன்று சேதப்படுத்தப்பட்டது. இதில் சீருடை அணிந்த இரண்டு போலீசார் பா.ஜ.க. தொண்டர்களால் சூழப்பட்டு கம்புகள் உள்ளிட்டவற்றால் கடுமையாக தாக்கப்பட்டனர். அவர்களில் சிலரது கைகளில் பா.ஜ.க. கட்சி கொடியும், சிலர் காவி வண்ண உடையணிந்தபடியும் காணப்பட்டனர். இதில் போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.

இதற்கு போலீசாரே காரணம் என பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மந்திரி சுபாஷ் சர்கார் கூறியுள்ளார். அவர் கூறும்போது, ரெயில் நிலையத்தில் வந்து இறங்குவதற்குள் போலீசார் பா.ஜ.க. தொண்டர்களை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மீது கற்கள் வீசப்பட்டு உள்ளன. வன்முறையை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், தலைமை செயலகத்திற்கு ஒரு கி.மீ. தொலைவிலேயே தடுப்பான்களை அமைத்து பா.ஜ.க.வினரை வர விடாமல் தடுத்து உள்ளனர் என குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சவுகதா ராய் இன்று கூறும்போது, தீவிர தூண்டுதலின்போதும் வங்காள போலீசார் பெரிய அளவில் கட்டுப்பாட்டுடன் இருந்தனர். அவர்கள் உச்சபட்ச அமைதி காத்தனர். மம்தா பானர்ஜி எங்கே சர்வாதிகாரம் காட்டினார்? மதியம் வரை அந்த நிகழ்ச்சி (பா.ஜ.க. பேரணி) நடந்தது. எவர் மீதும் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தவில்லை.

பா.ஜ.க.வின் நோக்கம் போலீசாரை தூண்டி விட்டு, அதனால் அவர்கள் துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்பது. பா.ஜ.க. தொண்டர்களே கற்களையும், செங்கற்களையும் அடுத்தடுத்து வீசினர். இதில், ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட பல்வேறு போலீசாரும் காயமடைந்தனர். புர்ராபஜார் பகுதியில் அவர்கள் கார்களை உடைத்தனர்.

ஆனால், குறைந்த அளவிலேயே பா.ஜ.க.வினர் தாக்கப்பட்டனர். ஒவ்வொரு தொலைக்காட்சி திரையிலும் இந்த காட்சிகளை நீங்கள் காணலாம் என கூறியுள்ளார். பரவலாக வன்முறை நடந்தபோதும், ஒரு ரவுண்டு கூட போலீசார் துப்பாக்கி சூடு நடத்தவில்லை. இது ஜனநாயகம் இல்லை என்றால், பின்னர் என்ன அது? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்