< Back
தேசிய செய்திகள்
தனி மாநில கோரிக்கை: மேற்கு வங்காளத்தில் திடீர் மறியல்.. ரெயில் சேவை பாதிப்பு
தேசிய செய்திகள்

தனி மாநில கோரிக்கை: மேற்கு வங்காளத்தில் திடீர் மறியல்.. ரெயில் சேவை பாதிப்பு

தினத்தந்தி
|
19 Jan 2024 1:43 PM IST

நியூ ஜல்பைகுரி- கவுகாத்தி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

ஜல்பைகுரி:

மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கிய தனி கம்தாபூர் மாநிலத்திற்காக ஐக்கிய கம்தாபூர் மக்கள் கட்சி (KPP(U)) போராடி வருகிறது. மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதிகள் மற்றும் அசாமின் மேற்கு பகுதிகளை இணைத்து தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில் ஐக்கிய கம்தாபூர் மக்கள் கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்து கம்தாபூர் மாணவர் சங்கம் (AKSU) சார்பில், மேற்கு வங்காளம் ஜல்பைகுரியில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

நியூ ஜல்பைகுரி-நியூ போங்கைகான் வழித்தடத்தில் உள்ள பெட்காரா ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கம்தாபூர் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். தங்கள் கோரிக்கைகளை திரிணாமுல் காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகளும் நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினர். இப்போராட்டத்தால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. அந்த வழித்தடத்தில் இயங்கக்கூடிய ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

பின்னர் ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

அதன்பிறகே ரெயில்கள் புறப்பட்டுச் சென்றன. போராட்டம் காரணமாக நியூ ஜல்பைகுரி- கவுகாத்தி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

மேலும் செய்திகள்