< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்காளம்:  காவலாளியை மிரட்ட பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த மாணவர்கள்
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: காவலாளியை மிரட்ட பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த மாணவர்கள்

தினத்தந்தி
|
23 Jun 2024 6:15 PM IST

காவலாளியை மிரட்டுவதற்காக துப்பாக்கியுடன் வந்த பள்ளி மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமையாசிரியர் கூறியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ரெஜிநகர் பகுதியில் அந்துல்பேரியா என்ற பெயரில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், 11-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் தங்களுடன் துப்பாக்கி ஒன்றை கொண்டு வந்துள்ளனர். அதனை காட்டி சக மாணவர்களை அவர்கள் மிரட்டியுள்ளனர்.

இதனால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களுக்கு தகவல் சென்றது. பள்ளி மாணவர்கள் துப்பாக்கி வைத்திருப்பது அவர்களின் கவனத்திற்கு சென்றதும் உடனடியாக சென்று, அவர்களிடம் இருந்து துப்பாக்கியை பறித்தனர்.

அது, ஒவ்வொரு முறையும் ஒரு குண்டு போட்டு சுட கூடிய நாட்டு துப்பாக்கி வகையை சேர்ந்தது. அந்த இரு மாணவர்களில் ஒருவர் தன்னுடைய நெருங்கிய குடும்பத்தினரிடம் இருந்து அந்த துப்பாக்கியை வாங்கி வந்துள்ளார்.

இதன்பின் ஆசிரியர் ஒருவரிடம், சக மாணவர்கள் கூறும்போது, சமீபத்தில் தங்கள் இருவரையும் கண்டித்து, சத்தம் போட்ட பள்ளி காவலாளியை சுடுவதற்காக துப்பாக்கியை கொண்டு வந்தோம் என அவர்கள் 2 பேரும் தொடர்ந்து கூறி வந்தனர் என்று கூறினார்கள்.

அவர்களை போலீசார் விசாரணைக்காக தங்களுடன் அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளியின் தலைமையாசிரியர் ஜகாங்கிர் ஆலம் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்