மேற்கு வங்காளம்; விடுதியின் பால்கனியிலிருந்து விழுந்து மாணவர் உயிரிழப்பு
|ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர் விடுதியின் பால்கனியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் நடியா மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்பிரசாத் குண்டு. அவருடைய மகன் ஸ்வப்னோதீப் குண்டு (வயது 18). இவர் அங்குள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பெங்காலி துறையில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் விடுதியின் 2-வது தளத்தில் உள்ள பால்கனியிலிருந்து விழுந்துள்ளார். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார். அவரை சக மாணவர்கள் மீட்டு அருகிலுள்ள கேபிசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்தார். இது குறித்து அவரது பெற்றோர் காவல்துறையில் வழக்கு கொடுத்துள்ளனர். காவல்துறையினர் அவர் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.