மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்; பலத்த பாதுகாப்புடன் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
|மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குகள் மத்திய படைகளின் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை எண்ணப்படுகின்றன.
புதுடெல்லி,
மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் கடந்த 8-ந்தேதி நடந்தது. பல இடங்களில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. ஓட்டு பெட்டிகள் எரிப்பு, துப்பாக்கி சூடு போன்ற நிகழ்வுகள் நடந்தன.
தேர்தலை முன்னிட்டு நடந்த வன்முறைக்கு 20 பேர் பலியாகி உள்ளனர். முர்ஷிதாபாத் நகரில் சில பகுதிகளில் வன்முறை பரவியதில் பலர் தாக்கப்பட்டனர். சிலர் காயமடைந்தும் உள்ளனர். இதன் ஒரு பகுதியாக 3 வாக்கு இயந்திரங்கள் சாக்கடையில் வீசப்பட்டன.
அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். தேர்தல் வன்முறையின்போது, பல இடங்களில் வாக்கு பெட்டிகள் சூறையாடப்பட்டு உள்ளன. பல கிராமங்களில் எதிரெதிர் கட்சியினர் மீது வெடிகுண்டுகளும் வீசப்பட்டன.
பா.ஜ.க. சார்பில், சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. டயர்கள் எரிக்கப்பட்டன. ஊர்வலம் நடத்தப்பட்டது. ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் தொடர்புடைய வன்முறையால், அரசியல் கட்சிகள் இடையே வாக்குவாதங்கள் அதிகரித்து உள்ளன. ஒவ்வொரு கட்சியும் ஒன்றை ஒன்று தாக்கி பேசி வருகின்றன. வன்முறை சம்பவங்களுக்கு மற்ற கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.
இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் புரூலியா, பிர்பும், ஜல்பைகுரி, நாடியா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 697 வாக்கு சாவடிகளில் மறுதேர்தல் நடத்த முடிவானது. நேற்று காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற்றது.
மத்திய படைகளின் பலத்த பாதுகாப்புடன், 697 வாக்கு சாவடிகளில் மறுதேர்தல் நடத்தப்பட்டது. மக்களும் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. முதலில் கிராம பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குகளும், அதனை தொடர்ந்து ஜில்லா சமிதிகள் மற்றும் ஜில்லா பரிஷத்துகள் ஆகியவற்றின் வாக்குகளும் எண்ணப்பட உள்ளன.
அனைத்து வாக்கு மையங்களிலும், போதிய அளவுக்கு மத்திய படைகள் குவிக்கப்பட்டு, சி.சி.டி.வி. கேமிராக்கள் உதவியுடன் அவை கண்காணிக்கப்படும்.
மேற்கு வங்காளத்தில் நடந்த வன்முறை சம்பவங்களை பற்றி விசாரணை மேற்கொள்ள 4 பேர் கொண்ட உண்மை கண்டறியும் கமிட்டியை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நியமித்து உள்ளார். இந்த குழு கொல்கத்தா நகருக்கு இன்று வந்தடையும். அது பற்றிய அறிக்கையை கட்சியின் தேசிய தலைவரிடம் விரைவில் வழங்கும்.