< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்காளம்:  சந்தேஷ்காளி விவகாரத்தில் 55 நாட்களுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: சந்தேஷ்காளி விவகாரத்தில் 55 நாட்களுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது

தினத்தந்தி
|
29 Feb 2024 9:46 AM IST

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஷாஜகானை சிறப்பு வங்காள போலீசார் அடங்கிய குழு நேற்றிரவு கைது செய்தது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஷேக் ஷாஜகான். இவரும், இவருடைய ஆதரவாளர்களும் சந்தேஷ்காளி பகுதியில் உள்ள பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர் என்றும் அவர்களுடைய நிலங்களை அபகரித்து கொண்டனர் என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இந்த வழக்கில் அவருடைய உதவியாளர்கள், ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். எனினும், ஷாஜகான் பிடிபடாமல் தப்பி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 26-ந்தேதி கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிறப்பித்த தனது உத்தரவில், ஷேக் ஷாஜகானையும் இந்த வழக்கில் சேர்க்கும்படி உத்தரவிட்டார்.

அவரை கைது செய்யாமல் இருக்க எந்த முகாந்திரமும் இல்லை என கூறினார். இந்த வகையில் பொது நோட்டீஸ் ஒன்றையும் வழங்க உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

இதன்படி, பல நாட்களாக அவரை போலீசார் கண்காணித்து வந்தனர். இந்த சூழலில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஷாஜகானை சிறப்பு வங்காள போலீசார் அடங்கிய குழு நேற்றிரவு கைது செய்தது. 55 நாட்களாக போலீசார் பிடியில் சிக்காமல் தப்பி வந்த நிலையில், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதன்பின் அவரை பஷீர்ஹத் கோர்ட்டுக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இந்த கைது நடவடிக்கையை திரிணாமுல் காங்கிரஸ் வரவேற்று உள்ளது. எனினும், மேற்கு வங்காள போலீசிடம் அவர் பாதுகாப்பாக காவலில் உள்ளார் என்று பா.ஜ.க. கூறி வருகிறது. ஷாஜகானுக்கு எதிராக, 2019-ம் ஆண்டில் 3 பா.ஜ.க. தொண்டர்கள் படுகொலை வழக்கு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

மேலும் செய்திகள்