< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்காளம்:  மத்திய மந்திரியை அறையில் வைத்து பூட்டிய பா.ஜ.க. தொண்டர்களால் பரபரப்பு
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: மத்திய மந்திரியை அறையில் வைத்து பூட்டிய பா.ஜ.க. தொண்டர்களால் பரபரப்பு

தினத்தந்தி
|
12 Sept 2023 9:51 PM IST

மேற்கு வங்காள பா.ஜ.க. தொண்டர்கள், மத்திய மந்திரி சுபாஸ் சர்க்காரை அறையில் வைத்து பூட்டியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

பன்குரா,

மேற்கு வங்காளத்தின் பன்குரா நகரில் மாவட்ட அலுவலகத்திற்கு இன்று வருகை தந்த மத்திய கல்வி இணை மந்திரி மற்றும் எம்.பி.யான சுபாஸ் சர்க்கார் தொண்டர்களை அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

அப்போது, பா.ஜ.க. தொண்டர்களில் சிலர் கும்பலாக சேர்ந்து மத்திய மந்திரியை கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வைத்து பூட்டினர். கோஷங்களையும் எழுப்பியபடி இருந்தனர்.

இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி தொண்டர்களில் ஒருவரான மொகித் என்பவர் கூறும்போது, அர்ப்பணிப்புடன் கூடிய கட்சி தொண்டர்களுக்கு சர்க்கார் முக்கியத்துவம் அளிப்பதில்லை. சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்.

அவருக்கு நெருங்கிய நபர்களை மாவட்ட கமிட்டியின் உறுப்பினர்களாக ஆக்குகின்றனர். கட்சியை காப்பாற்றவே நாங்கள் போராடி வருகிறோம். அவராலேயே, இந்த முறை பன்குரா நகராட்சியில் கட்சிக்கு எந்த சீட்டும் கிடைக்கவில்லை.

முந்தின தேர்தலில் 2 வார்டுகளை பா.ஜ.க. கைப்பற்றி இருந்தது. பஞ்சாயத்துகளுக்கு பல இடங்களில் அவர்களால் வேட்பாளர்களை கூட நிறுத்த முடியவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.

எனினும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கட்சி தொண்டர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் சமிக் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்