விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு: வெங்காய விலையை அதிகரிக்க அரசு நடவடிக்கை - மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே
|விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் வெங்காய கொள்முதல் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
விலை வீழ்ச்சி
மராட்டியத்தில் வரத்து அதிகரித்து உள்ளதால் வெங்காய விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. நாசிக்கில் உள்ள ஆசியாவின் பெரிய வெங்காய மார்க்கெட்டில் நேற்று முன்தினம் வெங்காயம் கிலோ ரூ.2-க்கு ஏலம் போனது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஏலத்தை நிறுத்தினர்.
முன்னதாக சோலாப்பூரை சேர்ந்த விவசாயி ஒருவர் 512 கிலோ வெங்காயத்தை மொத்த சந்தையில் கிலோ ரூ.1-க்கு விற்றார். அவருக்கு கழிவுகள் போக ரூ.2 மட்டுமே கிடைத்து இருந்தது. இதனால் விவசாயிகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
வெங்காய விலை வீழ்ச்சி நேற்று சட்டசபையில் எதிரொலித்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெங்காயத்துடன் சட்டசபைக்கு வந்தனர். கூட்டம் தொடங்குவதற்கு முன் எதிக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெங்காய மாலை அணிந்து சட்டசபை வாசலில் அமர்ந்து போராட்டம் செய்தனர். சிலர் வெங்காய கூடையை தலையில் சுமந்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த போராட்டம் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார் தலைமையில் நடைபெற்றது.
ஏற்றுமதி கொள்கையில் பிரச்சினை
வெங்காய விலை வீழ்ச்சி தொடர்பாக சட்டசபையில் முன்னாள் மந்திரி சகன்புஜ்பால் பேசியதாவது:-
நாட்டின் மிகப்பெரிய வெங்காய சந்தை எனது தொகுதியில் உள்ளது. எனக்கு கிடைத்த தகவலின்படி இந்திய வெங்காயத்துக்கு துருக்கி, பாகிஸ்தான், கஜகஸ்தான், உக்ரைன், மொரக்கோ, உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய நாடுகளில் கடும் கிராக்கி உள்ளது. நாம் நமது வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும். அது விவசாயிகளுக்கு பயன் அளிக்கும். இந்திய அரசு திடீரென வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாகவும், நீக்குவதாகவும் பல சர்வதேச வியாபாரிகள் புகார் அளித்து உள்ளனர். எனவே இந்தியாவிடம் இருந்து வெங்காயம் வாங்க அவர்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். நமது ஏற்றுமதி கொள்கை ஒரே மாதிரியாக இல்லை. மாநில அரசு இதுதொடர்பாக மத்திய அரசிடம் பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா எம்.எல்.ஏ. தெரிவித்த காரணம்
பா.ஜனதா எம்.எல்.ஏ. ராகுல் அகேர் பேசுகையில், "ரஷியா-உக்ரைன் போரால் இலங்கை, வங்காளதேச பொருளதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவும் மராட்டிய வெங்காயம் ஏற்றுமதி பாதிக்க காரணமாக அமைந்து உள்ளது. பல மாநிலங்கள் வெங்காய உற்பத்தியை தொடங்கி உள்ளன. இதுவும் நமது மாநில விவசாயிகளை பாதித்து உள்ளது" என்றார்.
வெங்காய விலை வீழ்ச்சி தொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது:-
விலை உயரும்
வெங்காய விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் உள்ளோம். தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு வெங்காய கொள்முதலை தொடங்கி உள்ளது. இதனால் விலை அதிகரிக்கும். எங்கள் கோரிக்கையை ஏற்று தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு வெங்காய கொள்முதலை அதிகரித்து உள்ளது. 2.36 லட்சம் டன் வெங்காயம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கொள்முதல் மையங்கள் இல்லாத இடங்களில், கொள்முதல் மையங்கள் தொடங்கப்படும். வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை எதுவும் விதிக்கவில்லை. தேவைப்பட்டால் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.