< Back
தேசிய செய்திகள்
அமர்நாத் யாத்திரை சென்ற மங்களூரு, உடுப்பியை சேர்ந்த 21 பேர் பத்திரமாக உள்ளனர்
தேசிய செய்திகள்

அமர்நாத் யாத்திரை சென்ற மங்களூரு, உடுப்பியை சேர்ந்த 21 பேர் பத்திரமாக உள்ளனர்

தினத்தந்தி
|
10 July 2023 12:15 AM IST

அமர்நாத் யாத்திரைக்கு சென்ற மங்களூரு, உடுப்பியை சேர்ந்த 21 பேர் பத்திரமாக உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

மங்களூரு-

அமர்நாத் யாத்திரைக்கு சென்ற மங்களூரு, உடுப்பியை சேர்ந்த 21 பேர் பத்திரமாக உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

அமர்நாத் யாத்திரை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இமயமலை பகுதியில் அமர்நாத் என்ற பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்தநிலையில் தற்போதும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. யாத்திரை சென்ற பக்தர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். இதில் கர்நாடகத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அங்கு சிக்கி உள்ளனர். அவர்களை மீட்டு வர மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

21 பேர் சிக்கி தவிப்பு

இந்த நிலையில், தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் அமர்நாத் யாத்திரைக்கு சென்ற 21 பேர் சிக்கி தவிப்பது தெரியவந்துள்ளது. தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வாலை சேர்ந்த சந்தோஷ் மாருதி என்பவரின் தலைமையில் மங்களூரு மற்றும் உடுப்பியை சேர்ந்த 21 பேர் குழுவாக கடந்த 5-ந்தேதி உடுப்பியில் இருந்து ரெயில் மூலம் புறப்பட்டு சென்றனர்.

தற்போது அமர்நாத் பகுதியில் மோசமான வானிலை நிலவி வருவதால் அங்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மங்களூரு, உடுப்பியில் இருந்து சென்றவர்கள் அமர்நாத் கோவிலுக்கு செல்ல முடியாமலும், ஜம்மு காஷ்மீருக்கு திரும்பி வர முடியாமலும் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அமர்நாத் யாத்திரை சென்றவர்கள் தாங்கள் பத்திரமாக உள்ளதாகவும், சி.ஆர்.பி.எப். முகாமில் தங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் குழுவாக படம் எடுத்து உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் உறவினர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும், அவர்களை மீட்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.

சிக்கமகளூருவை சேர்ந்த 5 பேர்

இதேபோல், சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரியை சேர்ந்த சீனிவாஸ், மணி, சந்திரசேகர், பரத், மனோஜ் ஆகிய 5 பேரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அமர்நாத் யாத்திரை சென்றனர். அமர்நாத் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் அவர்கள் அங்கு சிக்கி கொண்டுள்ளனர். அவர்கள் தாங்கள் பத்திரமாக இருப்பதாகவும், விரைவில் திரும்பி வந்து விடுவதாகவும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்