பாஜக எங்கே அரசமைத்தாலும் பழங்குடியினர் நல்வாழ்வுக்கு உயர் முன்னுரிமை அளிக்கிறோம் - பிரதமர் மோடி
|பழங்குடியின சமூகங்களின் நலனே அரசின் முதன்மையான முன்னுரிமை என்று பிரதமர் மோடி கூறினார்.
ஆமதாபாத்,
குஜராத் மாநிலத்தின் தபி, வியாராவில் ரூ.1970 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-
உங்களின் வளர்ச்சிக்கு முழு மனதோடு நான் முயற்சி செய்வேன்.இன்று அடிக்கல் நாட்டப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள், தபி, நர்மதா உள்ளிட்ட ஒட்டுமொத்த பழங்குடி மக்கள் பகுதி மேம்பாட்டோடு தொடர்புடையவை.
பழங்குடி மக்கள் நலன் மற்றும் பழங்குடி சமூகத்தினர் நல்வாழ்வு என 2 வகையான கொள்கைகளை நாடு கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பழங்குடி மக்களின் நலன் பற்றி கவலைப்படாத கட்சிகள் உள்ளன. பாஜக போன்ற கட்சி பழங்குடியினர் நல்வாழ்வுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது.
நாங்கள் பழங்குடியின பாரம்பரியங்களுக்கு மதிப்பளிக்கிறோம். பழங்குடி சமூகங்களின் நல்வாழ்வு எங்களின் உயர் முன்னுரிமையாக இருக்கிறது.
நாங்கள் எங்கே அரசமைத்தாலும் பழங்குடியினர் நல்வாழ்வுக்கு உயர் முன்னுரிமை அளிக்கிறோம். கடந்த 7-8 ஆண்டுகளில் பழங்குடியினர் நலனுக்கான பட்ஜெட் 3 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
அனைவரின் முயற்சியுடன் வளர்ச்சியடைந்த குஜராத்தை வளர்ச்சி அடைந்த இந்தியாவை நாம் கட்டமைப்போம் என்று பிரதமர் தெரிவித்தார்.