< Back
தேசிய செய்திகள்
தசரா யானைகளின் எடை அதிகரிப்பு; அம்பாரியை சுமக்கும் அபிமன்யு 230 கிலோ அதிகரித்தது
தேசிய செய்திகள்

தசரா யானைகளின் எடை அதிகரிப்பு; அம்பாரியை சுமக்கும் அபிமன்யு 230 கிலோ அதிகரித்தது

தினத்தந்தி
|
10 Sep 2022 5:15 PM GMT

தசரா யானைகளின் எடை அதிகரித்துள்ளது. அம்பாரியை சுமக்கும் அபிமன்யு யானை 230 கிலோ அதிகரித்துள்ளது.

மைசூரு:

மைசூரு தசரா விழா

கர்நாடகத்தில் மைசூரு தசரா விழா உலகப் புகழ்பெற்றது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் எளிமையாக நடந்த தசரா விழாவை இந்த ஆண்டு கோலாகலமாக நடத்த கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது. இந்த ஆண்டுக்கான தசரா விழா வருகிற 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தசரா ஊர்வலம் எனும் ஜம்புசவாரி ஊர்வலம் அக்டோபர் 5-ந்தேதி பிரமாண்டமாக நடக்கிறது. இதில் அபிமன்யு என்ற யானை 750 கிலோ எடையிலான தங்க அம்பாரியை சுமந்து வீறுநடை போடும். அதை தொடர்ந்து மற்ற யானைகளும் ராஜவீதியில் கம்பீர நடை போட்டப்படி நடக்கும். அதன்பின்னர் கலைக்குழுவினர், அலங்கார ஊர்தி, குதிரைப்படை, போலீசார் அணிவகுத்து செல்வார்கள். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

தினமும் பயிற்சி

இந்த தசரா விழா ஊர்வலத்தில் இவ்வாண்டு 14 யானைகள் பங்கேற்கிறது. இதற்காக முதற்கட்ட கடந்த 10-ந்தேதி மைசூருவுக்கு 9 யானைகள் அழைத்துவரப்பட்டன. இதில் அம்பாரியை சுமக்கும் அபிமன்யு, அர்ஜுனா, கோபாலசாமி, தனஞ்செயா, பீமா, காவேரி, சைத்ரா, லட்சுமி , மகேந்திரா ஆகிய 9 யானைகள் மைசூருவுக்க வந்தன.

இந்த யானைகளுக்கு நடைபயிற்சி, மணல் மூட்டைகளை சுமக்கும் பயிற்சி, விழாவின் போது வெடிசத்தம், மேளசத்தம் கேட்டு மிரளாமல் இருக்க பீரங்கி குண்டுகளை வெடிக்க செய்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

எடையளவு பரிசோதனை

இந்த நிலையில் 2-வது கட்டமாக தசரா விழாவில் பங்கேற்க ஸ்ரீராமா, சுக்ரீவா, கோபி, பார்த்தசாரதி, விஜயா ஆகிய யானைகள் வந்துள்ளன. முதற்கட்டமாக வந்த யானைகளின் உடல் எடையளவு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் யானைகளின் உடல் எடையை அதிகரிக்க ஊட்டசத்து உணவுகள், மாத்திரைகள், பழங்கள் வழங்கப்பட்டு வந்தன. இதனால் முதற்கட்டமாக வந்த 9 யானைகளின் எடைகளும் அதிகரித்து வந்தது.

இதற்கிடையே நேற்று முன்தினம் 14 யானைகளுக்கும் வனத்துறையினர், தசரா குழுவினர் எடையளவு பரிசோதித்தனர்.

எடை அதிகரிப்பு

இதில் அம்பாரியை சுமக்கும் அபிமன்யு 230 கிலோ எடை அதிகரித்துள்ளது. அதாவது 4,770 கிலோவில் இருந்து 5 ஆயிரம் கிலோவாக அந்த யானை எடை அதிகரித்துள்ளது.

அதுபோல் 63 வயதான அர்ஜுனா 5,775 கிலோவில் இருந்து 5,950 கிலோவாகவும், கோபாலசாமி 320 கிலோ அதிகரித்து 5 ஆயிரத்து 460 கிலோவாகவும், தனஞ்செயா 80 கிலோ அதிகரித்து 4,890 கிலோவாகவும் உடல் எடை உயர்ந்துள்ளது.

பீமா யானை 3,950 கிலோவில் இருந்து 4,345 கிலோவாகவும் (425 கிலோ உயர்வு), மகேந்திரா 4,250 கிலோவில் இருந்து 4,450 கிலோவாகவும் அதிகரித்துள்ளது.

காவிரி யானை 3,245 கிலோ, சைத்ரா 3,235 கிலோ, லட்சுமி 3,150 கிலோ எடையுடன் உள்ளது. 2-வது கட்டமாக வந்த ஸ்ரீராமா 4,475 கிலோவும், சுக்ரீவா 4,785 கிலோவும், கோபி 4,460 கிலோவும், பார்த்தசாரதி 3,445 கிலோவும், விஜயா 2,760 கிலோ எடையும் கொண்டதாக உள்ளது. நாளை (திங்கட்கிழமை) முதல் 14 யானைகளும் மைசூரு அரண்மனையில் இருந்து பன்னிமண்டபா வரை 5 கிலோ மீட்டர் தூர நடைபயிற்சி மேற்கொள்ளும் என்று மாவட்ட வன அலுவலர் வி.கரிகாலன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்