ஹெலிகாப்டரில் திருமண ஊர்வலம்... தாத்தாவின் நிறைவேறாத கனவை நனவாக்கிய பேரன்கள்
|மத்திய பிரதேசத்தில் தங்களது தாத்தாவின் நிறைவேறாத ஆசையை பூர்த்தி செய்யும் வகையில், பேரன்கள் ஹெலிகாப்டரில் திருமண ஊர்வலம் நடத்தி உள்ளனர்.
போபால்,
வடமாநிலங்களில் திருமண நிகழ்ச்சியின்போது பொதுவாக, மணமக்களை ஊர்வலம் அழைத்து செல்ல, குதிரைகளை பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. நவீன காலத்தில் ஆடம்பர ரக கார்கள், சொகுசு வாகனங்கள் வந்தபோதிலும், தங்களது பாரம்பரியம் மாற கூடாது என்பதற்காக இன்றளவும் குதிரைகள், சாரட் வண்டிகளில் மணமக்கள் ஊர்வலம் நடைபெற்று வருகிறது.
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் குரானா கிராமத்தில் ஊர் மக்கள் வியக்கும் வகையிலான திருமண ஊர்வலம் ஒன்று நடந்து உள்ளது. இதில், மணமகன் திருமண ஊர்வலத்தில் கார், குதிரை போன்றவற்றுக்கு பதிலாக, ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
குரானா கிராமத்தில் வசித்து வருபவர்கள் ஹேம் மண்ட்லோய் மற்றும் யாஷ் மண்ட்லோய். அவர்களது குடும்பம் அந்த ஊரில் விவசாயம் செய்து வருகின்றது. உறவினர்களான இவர்கள் இருவரும், திருமண ஊர்வலத்திற்காக தங்களது ஜோடியை அழைத்து வருவதற்காக ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து உள்ளனர்.
இதுபற்றி அவர்கள் கூறும்போது, அது எங்களுடைய மறைந்த தாத்தாவின் விருப்பம். தன்னுடைய பேரன்கள் ஹெலிகாப்டரில் திருமண ஊர்வலம் சென்று, மணமகள்களை அழைத்து வரவேண்டும் என விரும்பினார். அவர் இன்று உயிருடன் இல்லை. ஆனால், அவரது கனவை எங்களது தந்தைகள் நிறைவேற்றி விட்டனர்.
இது, தற்போது எங்களுடைய பாரம்பரியத்தில் ஒன்றாக கலந்து விட்டது. இனி வருங்காலத்தில் எங்களுடைய குழந்தைகளையும் ஹெலிகாப்டரில் திருமண ஊர்வலம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்வோம் என கூறினர்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கூடுதலான விசயம், மண்ட்லோய் குடும்பத்தில் இதற்கு முன்பு, அவர்களது முதல் மகனுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்தபோதும், இதேபோன்று வாடகைக்கு ஹெலிகாப்டரை அமர்த்தி அதில் ஊர்வலம் அழைத்து வந்தனர்.
ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுக்க தற்போது ரூ.5 முதல் ரூ.6 லட்சம் வரை செலவாகும் என அவர்கள்தெரிவித்து உள்ளனர்.