சுற்றுலா தலங்கள் தொடர்பான இணையதளம்; சி.டி.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
|சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் தொடர்பான இணையதளத்தை சி.டி.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்னாள் மந்திரி சி.டி.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் சுற்றுலா தொடர்பான இணையதளத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ரமேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேசியதாவது:-
சிக்கமகளூருவில் பாபாபுடன் கிரி, முல்லையன்கிரி உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. அந்த சுற்றுலா தலங்கள் பற்றிய தகவல்கள், அங்கு செல்லும் வாகனங்கள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய இணையதளத்தை தற்போது தொடங்கி வைத்துள்ளேன்.
ஏற்கனவே இதுபோன்ற ஏராளமான இணையதளங்கள் உள்ளன. ஆனால் இந்த இணையதளம் அரசால் அங்கீகரிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட இணையதளம் ஆகும். இந்த இணையதளத்தில் அனைத்து தகவல்களும் இடம்பெற்று உள்ளன.
பாபாபுடன் கிரி, முல்லையன்கிரி பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கைமரம் பகுதியில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்து செல்ல வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.