'பர்தா' அணிந்து குத்தாட்டம்; 4 மாணவிகள் இடைநீக்கம்
|மங்களூருவில் ‘பர்தா’ அணிந்து குத்தாட்டம் 4 மாணவிகளை இடைநீக்கம் செய்து தனியார் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மங்களூரு:
குத்து பாடலுக்கு நடனம்
மங்களூரு நகர் வாமஞ்சூர் பகுதியில் செயின்ட் ஜோசப் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் கடந்த 7-ந்தேதி நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின் இறுதியில் இந்தி குத்து பாடல் ஒன்றுக்கு பர்தா அணிந்த 4 முஸ்லிம் மாணவிகள் குத்தாட்டம் போட்டனர்.
மாணவிகளின் இந்த குத்தாட்டத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மாணவிகளின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களில் இதுதொடர்பாக காரசார விதமும் நடந்தது.
4 மாணவிகள் இடைநீக்கம்
ஏற்கனவே கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் மத அடையாள ஆடை அணிய மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், பர்தா அணிந்து மாணவிகள் குத்தாட்டம் போட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை தனியார் கல்லூரி நிர்வாகம் தீவிரமாக எடுத்து கொண்டு விசாரணை நடத்தியது. அப்போது கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி முடிந்ததும், அந்த மாணவிகள் மேடை ஏறி குத்தாட்டம் போட்டது தெரியவந்தது.
இதையடுத்து குத்தாட்டம் போட்ட 4 முஸ்லிம் மாணவிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாக குழு முடிவு செய்தது. அதன்படி குத்தாட்டம் போட்ட 4 முஸ்லிம் மாணவிகளையும் இடைநீக்கம் செய்து நேற்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கல்லூரி முதல்வர் விளக்கம்
இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், 'எங்கள் கல்லூரியில் கடந்த 7-ந்தேதி நடந்த அதிகாரபூர்வ நிகழ்ச்சி முடிந்த பிறகு மாணவிகள் மேடை ஏறி நடனமாடி உள்ளனர். இது ஏற்கக்கூடியது அல்ல. சமூகங்கள் இடையே நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்தவொரு செயலையும் கல்லூரி வளாகத்திற்குள் ஆதரிப்பது இல்லை. நடனமாடிய 4 மாணவிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.