< Back
தேசிய செய்திகள்
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் அறிக்கை அளிக்கும் வரை விடமாட்டோம்: திருச்சி சிவா பேட்டி
தேசிய செய்திகள்

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் அறிக்கை அளிக்கும் வரை விடமாட்டோம்: திருச்சி சிவா பேட்டி

தினத்தந்தி
|
21 July 2023 2:21 AM IST

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் அறிக்கை அளிக்கும் வரை விடமாட்டோம் என்று திருச்சி சிவா தெரிவித்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவை தி.மு.க. குழு தலைவர் திருச்சி சிவா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூர் பிரச்சினை பற்றி பிரதமர் இதுவரை பேசவில்லை. குறைந்தபட்சம் நாடாளுமன்றத்துக்கு கட்டுப்பட்ட வகையில் இங்குவந்து ஒரு அறிக்கை அளிக்க வேண்டும். இதன் அடிப்படையில் விவாதிக்கலாம் என்று நோட்டீஸ் கொடுத்து இருந்தோம். தமிழ்நாடு கவர்னர் விவகாரம் குறித்தும் நோட்டீஸ் கொடுத்தோம். ஆனால் உடனடியாக விவாதத்துக்கு செல்லலாம் என்றனர். நாங்கள் அதற்கு உடன்படவில்லை. இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

மணிப்பூரில் தற்போது மனிதாபிமானத்துக்கு அப்பாற்பட்டு வன்கொடுமைகள் நடக்கிறது. நாங்கள் ஒரு குழுவாக மணிப்பூர் செல்ல இருக்கிறோம். எப்போது என்று அடுத்த கூட்டத்தில் முடிவு எடுத்து சொல்வோம். மக்கள் இந்த பிரச்சினைகளை கவனித்து, எதிர்காலத்தில் நல்ல தீர்ப்பு அளிக்க வேண்டும். மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை என்று அவர்கள் சொல்வதில் உண்மையில்லை. பிரதமர் அறிக்கை அளிக்கட்டும். நாங்கள் பேச தயார். அறிக்கை அளிக்கும்வரை நாங்கள் விடமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்